புலம்பெயர் தமிழ் வைத்தியர்களின் செயற்பாடு! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

புலம்பெயர் தமிழ் வைத்தியர்களின் செயற்பாடு!

அண்மையில் இலங்கையின் தென் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்திய உதவிகளை வழங்கும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் குழுவொன்று விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் 7 நாடுகளில் வாழும் 17 வைத்தியர்கள் களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பின்தங்கிய கிராமங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்திய சிகிச்சை வழங்கியுள்ளனர்.
பிரித்தானியா, கனடா, நோர்வே, அமெரிக்க, பிரான்ஸ், பஹ்ரேன் மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் வைத்தியர்கள் இந்த நடவடிக்கையில் இணைந்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஊடாக இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பாக அமையும் என புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
தென் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டமை குறித்து வேதனை அடைந்த தமது அமைப்புகளின் உறுப்பினர் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக புலம்பெயர் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இந்த வைத்தியர்கள் 10 நாட்களில் 780 பேருக்கு சிகிச்சை வழங்கியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சிறுவர் இல்லங்களில் வசிக்கும் சிறுவர்களுக்கு சிகிச்சை வழங்கியுள்ளதுடன் 300 கண்ணாடிகளையும் வழங்கி வைத்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
புலம்பெயர்து வாழும் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என, இலங்கையின் தென் மாகாணத்தில் கடும்போக்குவாதிகள் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள், சிங்கள கிராமங்களுக்கு வருகை தந்திருப்பதானது மிகுந்த மகிழ்ச்சி என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

About UK TAMIL NEWS