தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைமை பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமனரத்ன தேரர் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் பௌத்த பிக்குகள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள் என்றும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்திருக்கின்றார்.
அது மாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகளை முஸ்லீம் சமூகம் பறித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ள மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டியே சுமனரத்ன தேரர் இவற்றைத் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மீண்டும் யுத்தமொன்று வெடிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
எங்களை நிர்க்கதியாக்க வேண்டாம். புத்தசானத்தின் பாதுகாவலர்களான பௌத்த பிக்குமார்களை நிர்க்கதியாக்க வேண்டாம். எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். பொலிசார் பௌத்த பிக்குகளான எம் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், அரச நிர்வாக சேவையிலுள்ளவர்கள் நாட்டின் இயற்றை வளங்களை அழிப்பதற்கான பாரிய செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
புன்னக்குடா மற்றும் கரடியனாறு பகுதிகளிலுள்ள காணிகளுக்கு என்ன நடக்கின்றது என பாருங்கள். நான் பிரச்சினையை கூறுகின்றேன். நான் பதிலைக் கேட்கின்றேன். பிரபாகரன் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பதை அச்சமின்றி கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
ஏன் அப்படி கூறுகின்றேன் என்றால், அன்று சிங்கள முகமூடி அணிந்துகொண்டு நாட்டின் நன்மதிப்பையும் பெறுமதிமிக்க வரலாற்றையும் சிங்கள இனத்தை மிதித்து முன்னோக்கிச் செல்கின்ற ஒரு வேலைத்திட்டம் பிரபாகரன் காலத்தில் இருக்கவில்லை என்பதை பகிரங்கமாக கூற வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று திட்டமிட்ட இனவழிப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புரதான இடங்களை அழிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. காடுகளும் அழிக்கப்படுகின்றன. தற்போதுள்ள அரசாங்க அதிபரை விரட்டுவதற்கும் தூரத்துவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். யாருடைய தேவைக்காக இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆனால் நாடு அழியும் வரைக்கும் ஆட்சியில் உள்ளவர்கள் நித்திரை கொள்வார்கள் ஆயின் எதனையும் செய்ய முடியாது. இந்த விடையங்களை சுட்டிக்காட்டும் போது எமது வாயை மூடி ஓரங்கட்ட ஆட்சியில் உள்ளவர்கள் முயற்சிக்கின்றார்கள். எம்மை அடக்கியாள முயற்சிக்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்ய முடியாது என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதற்கு எந்தவொரு தலைவர்களும் இன்றி அவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதாகவும் அம்பிட்டியே சுமனரத்ன தேரர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தனி நாட்டிற்காக 30 வருடங்கள் யுத்தம் செய்த அப்பாவித் தமிழ் மக்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்காக கதைப்பதற்கு ஒருவரும் இல்லாது நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அறுகம்பை தொடக்கம் மூதூர், தோப்பூர் வரைக்கும் ஏதாவது ஒரு தமிழ் நகரமொன்று இருக்கின்றதா? என நாங்கள் கேட்கின்றோம். இல்லை.
இரண்டு பக்கங்களையும் பிடித்துக்கொண்டு முழு கிழக்கு மாகாணத்தையும் முஸ்லீம்கள் ஆக்கிரமித்துள்ளனர். அந்த அப்பாவித் தமிழ் மக்கள் இன்றும் காடுகளில் அங்காங்கே முடக்கப்பட்டு, துன்பப்படுகின்றனர். அவற்றை கதைப்பதற்கு எந்தவொரு ஆட்சியாளர்களும் இல்லை. தலைவர்களும் இல்லை.
இவ்வாறு சென்றால் இந்த நாட்டில் இந்த மாகாணத்தில் மீண்டும் யுத்தம் ஏற்படும். அவ்வாறான யுத்தத்தை தடுப்பதற்கு நாட்டின் அழிவை தடுப்பதற்காகத் தான் பௌத்த பிக்குகள் என்ற வகையில் எமக்கு இருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கே நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.
முஸ்லீம் சமூகத்தினர் தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்திய அம்பிட்டியே சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாணத்தில் பாரிய பள்ளிவாசல்களையும் இஸ்லாமிய பல்கலைக்கழகங்களையும் அமைத்து கிழக்கு மாகாணத்தையே இஸ்லாமிய மயப்படுத்த முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நாம் ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். அனைத்து இனத்தவருக்கும் மதிப்பளிக்கின்றோம். அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கின்றோம். அதேவேளை எம்மைப் பற்றியோ, எமது வரலாற்றையோ மறக்கடிப்பதற்கு யாருக்கும் நாம் இடமளிக்க மாட்டோம். அதற்கு காரணங்கள் இருக்கின்றன.
இந்த நாடு புத்தபொருமானுக்கு பூஜை செய்வதற்காக உருவான புனித பூமி என்பதை பகிரங்கமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இது பௌத்த இராஜ்ஜியம். அதனை யாருக்கும் இல்லை எனக் கூறமுடியாது. எனினும் இந்த பௌத்த இராஜ்ஜியத்தில் ஆசியாவின் மிகப் பெரிய முஸ்லீம் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகின்றது. அதேவேளை ஆசியாவிலேயே மிகப்பெரிய முஸ்லீம் பள்ளிவாசலொன்றும் கட்டப்படுகின்றது.
எனினும் எமது நாட்டின் ஆட்சியாளர்கள் மௌனமாக இருக்கின்றனர். ஏன் எமது ஆட்சியாளர்கள் மௌனமாக இருக்கின்றனர்? தமது அதிகாரத்தை மாத்திரம் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படப்போகும் அபாயம் தொடர்பில் ஆட்சியாளர்கள் அக்கறை கொள்வதில்லை.
வாழைச்சேனையை தாண்டி செல்லும் போது வரும் வெலிகந்தை புனானை என்ற இடத்தில் 400 ஏக்கர் காணியில் நிர்மணிக்கப்படும் மிகப் பெரிய முஸ்லீம் பள்ளிவாசல் மற்றும் முஸ்லீம் பல்கலைக்கழகம் என்பன எதிர்காலத்தில் என்ன செய்யப்போகின்றன என்பதை சிந்திக்கவே முடியாதுள்ளது.
நாட்டில் வாழும் பௌத்த, இந்து, கத்தோலிக்க மதங்களைச் சேர்ந்த மக்கள் மத்தியில் இன, மத வன்முறைகள் தோற்றுவிக்கப்படும் போது அவற்றை தடுத்து நாட்டை ஆளக்கூடிய ஆட்சியாளர்கள் இருப்பார்களா என்ற பாரதூரமான கேள்வியொன்று எழுகின்றது.
அதனால்தான் இவ்வாறான மத ஆக்கிரமிப்புக்களை தடுத்து வழிபாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு நாம் ஆட்சியாளர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு இல்லாவிடின் நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்பதை தடுக்க முடியாது.