12 வயதுச் சிறுவன் ஒருவனை ஆசிரியர் ஒருவர் அவனது வீட்டுக்குத் தேடிச் சென்று தாக்கியதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கற்கும் அப்துல் சித்தீக் முஹம்மத் சஜித் எனும் மாணவனே காங்கேயனோடையிலுள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியரினால் தாக்கப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ள இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, அல்ஹிறா வித்தியாலயத்தில் கற்கும் மேற்படி மாணவனும் அதேபாடசாலையில் ஒரே வகுப்பில் கற்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சம்பவம் அந்த வகுப்பாசிரியரினால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் பாடசாலை முடிந்து மாணவர்கள் தத்தமது வீடு சென்றுள்ளனர்.
குறித்த முஹம்மத் சஜித் எனும் சிறுவன் வீட்டுக்கு வந்து உணவருந்திக் கொண்டிருக்கும்போது தன்னுடன் கைகலப்பில் ஈடுபட்ட சக வகுப்பு மாணவன் வீட்டுக் கதவைத் தட்டி பெயர் கூறி இந்த மாணவனை அழைத்துள்ளான்.
அவ்வேளையில், முஹம்மத் சஜித் கதவைத் திறந்தபோது சக மாணவனின் தந்தையான காங்கேயனோடை வித்தியாலயமொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் முஹம்மத் சஜித் என்ற குறித்த மாணவனை சரமாரியாகத் தாக்கத் ஆரம்பித்துள்ளார்.
ஓலக் குரல்கேட்டு வீட்டிலிருந்த மாணவனின் தாயும் சகோதரியும் அயலவர்களும் ஓடிச் சென்று பார்த்தபோது மேற்படி சக மாணவனின் ஆசிரியர் தகாத வார்த்தைகளைக் கூறி மாணவனைத் தாக்கிய வண்ணமே இருந்துள்ளார்.
ஆசிரியரிடமிருந்து தாக்கப்பட்ட மாணவனை விடுவித்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்ததாக மாணவனின் தந்தை தெரிவித்தார், அத்துடன் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
குறித்த ஆசிரியர் தலைமறைவாகியிருப்பதாகவும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.