பெண்ணொருவரைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிகள் இருவருக்கு பதின்மூன்று ஆண்டுகளின் பின் பன்னிரண்டு ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இருவரும் கசிப்பு விற்பனையில் நண்பர்கள் என்பதோடு வில்பத்துப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவியைக் கடத்திச் சென்று வில்பத்து காட்டுப் பகுதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜாங்கன பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் வயல் சேனையின் குடிசையில் இருந்தபோது கடத்தப்பட்டுள்ளார். சம்பவ நேரத்தில் இவரது கணவரும் உடன் இருந்ததால் கணவனைத் தாக்கிவிட்டே குற்றவாளிகள் இருவரும் இவரைக் கடத்தியுள்ளனர்.
துஷ்பிரயோகத்தின் பின் சம்மந்தப்பட்ட இருவரும் கற்பாறையில் உறங்கிகொண்டிருந்தபோது அவிடத்திலிருந்து தப்பிச் சென்ற குறித்த பெண் பொலிஸாரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். அதன் பின்னர் இரு நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளிகள் இருவரும் நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த அசங்க பிரபாத் ஆரியதாச மற்றும் ரன்கோத் ஜேடிதுரயலாகே சமன் என அடையாளப்படுத்தப்பட்டு இந்த கடூழிய சிறைத்தண்டனை அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.