யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாலியல் வன்கொடுமையின்பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கில் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் எனப்படும் சசிக்குமார் கொழும்புக்கு தப்பித்து சென்றமை தொடர்பான விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இது குறித்த குற்றப்பத்திரம் ஒன்றை பொலிஸ் ஆணைக்குழு தற்போது அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குற்றப்பத்திரமானது அன்றைய காலத்தில் யாழ்மாவட்டத்தின் பகுதிகளுக்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிடம் விளக்கம் கோரி பொலிஸ் ஆணைக்குழுவால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த குற்றப்பத்திரத்திற்கான விளக்கத்தை அவர் முப்பது நாட்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் வழங்கும் பதில்களை ஆராய்கின்றபோது இது குறித்த விசாரணை ஒன்று அவசியம் எனக் காணப்பட்டால் ஓய்வு பெற்ற அரச நிர்வாக சேவை அதிகாரி ஊடாக விசாரணை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சுவிஸ்குமார் கொழும்புக்குத் தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புபட்டார் என நீதிமன்றில் குறிப்பிடப்பட்ட யாழ் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உதவிப் பொறுப்பதிகாரியான ஸ்ரீகஜன், கடந்த வாரம் இந்தியா செல்லவிருந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.