செல்பி' மோகத்தால் தாதி மாணவிகள் 3 பேர் அணையில் மூழ்கி பலியானார்கள். அவர்களை காப்பாற்ற முயன்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்தியா மராட்டிய மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன் கானா கிராமத்தில் மகா காளி அணைப்பகுதி உள்ளது.
நேற்றுமுன்தினம் தாதி கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள் இந்த அணைப்பகுதியை சுற்றிப்பார்க்க வந்தனர்.
அவர்கள் அணையில் 'செல்பி' எடுக்க விரும்பினர். தண்ணீரில் இறங்கி 3 பேரும் செல்பி எடுத்தனர்.
அப்போது ஒரு மாணவி கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார்.
இதை பார்த்து அதிர்ந்து போன ஏனைய 2 மாணவிகளும் அவரை பிடிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் துரதிருஷ்டவசமாக 3 பேரும் அணையில் மூழ்கி தத்தளித்தனர்.
இதை பார்த்த குரவ் குல்ஹானே என்ற 10-ம் வகுப்பு மாணவன், மாணவிகளை காப்பாற்ற அணையில் குதித்தான்.
ஆனால் அவனும் தண்ணீரில் தத்தளித்தான். இதனால் 4 பேரும் அடுத்தடுத்து அணையில் மூழ்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அணையில் மூழ்கிய 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அவர்களால் அனைவரையும் சடலமாக தான் மீட்க முடிந்தது.
அணையில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.