முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு எதிரான போராட்டங்களை ஆரம்பிக்க முயல்வது மீண்டும் புலிவாலை பிடிப்பதற்கு ஒப்பானது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து, இந்தியா விஜயத்துக்கான தயார்ப்படுத்தலை மகிந்த தரப்பு மும்முரமாக மேற்கொண்டிருந்த நிலையில், திடீரென 7 நாள் விஜயமாக மகிந்த ராஜபக்ச பாகிஸ்தான் சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின் போது அந்நாட்டு உயர் அதிகாரிகளுடன் மகிந்த ராஜபக்ச பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். தற்போது பாகிஸ்தானுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு மகிந்த நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க்குதங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சி ஊடாக மகிந்த இந்திய எதிர்ப்பு கோஷங்களை வெளியிட்டு வருகின்றார்.
குறித்த விடயம் தொடர்பில் சீனக்குடா பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், தொடர்ந்தும் மகிந்த தரப்பு இந்திய எதிர்ப்பு போக்கையே முன்வைத்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், இந்தியாவின் அழைப்பை புறக்கணிக்கும் வகையில் மகிந்த தரப்பு இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பது மகிந்தவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பில் விரிசலை அதிகரிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.