கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு மாவா என்கின்ற போதை வஸ்தை விற்பனை செய்த சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கண்ணவின் பணிப்புரைக்கமைய நேற்று (10) திங்கட்கிழமை இரவு இரணைமடுப் பகுதியில் வைத்து விசேட குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்தை விநியோகிப்பதாக, பிரதேசவாசிகளால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கண்ணவின் பணிப்புரைக்கு அமைவாக அப்பகுதி சிறுவன் ஒருவனுடன் சிவில் உடையில் சென்ற பொலிசார் ஒருவர் குறித்த சந்தேகநபரிடம் பணம் கொடுத்து போதைப்பொருளை பெற்றுக்கொண்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்கும் குறித்த போதைப் பொருளை விற்பனை செய்த சம்பவத்தை உறுதி செய்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த குழுவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்
சந்தேகநபரை இன்றைய தினம் (11) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.