பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏ.டி.ஜி.பி. சந்தியா கொச்சி குற்றப்பிரிவு ஐ.ஜி. தினேந்திர கஷ்யப் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதலில் பணம் கேட்டு மிரட்டுவதற்காகவே பாவனா கடத்தல் நடந்ததாக பல்சர் சுனில் தெரிவித்தார். பிறகு பாவனா கடத்தல் பின்னணியில் ஒரு நடிகருக்கு தொடர்பு இருப்பதாக கூறியதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அந்த நடிகர் திலீப்பாக இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதை திலீப் மறுத்தார்.
இதற்கிடையில் நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்சர்சுனில் இந்த வழக்கில் தனது பெயரை போலீசாரிடம் சொல்லாமல் இருக்க ரூ.1½ கோடி கேட்டு மிரட்டியதாக நடிகர் திலீப் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.
இதைதொடர்ந்து நடிகர் திலீப் அவரது நண்பரும் டைரக்டருமான நாதிர்ஷா மற்றும் திலீப்பின் மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடம் போலீசார் ஏற்கனவே 13 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக மீண்டும் பொறுப்பேற்று உள்ள லோக்நாத்பெக்ரா இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த உத்தரவிட்டு உள்ளார். மேலும் அவர் ஐ.ஜி. தினேந்திர கஷ்யப் மற்றும் விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் படி அவர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. போலீஸ் விசாரணையில் பல்சர் சுனில் பாவனா கடத்தல் சம்பவம் நடப்பதற்கு முன்பும், கடத்தப்பட்ட பின்பும் பல்வேறு நபர்களுடன் போனில் பேசி உள்ளார். அவர் அடிக்கடி பேசிய போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த போன் நம்பர் நடிகர் திலீப்பின் மேலாளர் அப்புண்ணிக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
மேலும் ஜெயிலில் இருந்தபடி சுனில் டைரக்டர் நாதிர்ஷாவை 3 முறை போனில் தொடர்புகொண்டு பேசிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. சுனிலுடன் ஜெயிலில் இருந்த சக கைதியான ஜின்சன் என்பவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இதை தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் திலீப் நடித்த சினிமா சூட்டிங் ஒன்றின் போது படப்பிடிப்பு தளத்தில் சுனில் நிற்பது போன்ற புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளது.
இதன் அடிப்படையில் நடிகர் திலீப், டைரக்டர் நாதிர்ஷா, திலீப்பின் மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நடிகர் திலீப்பின் 2-வது மனைவி நடிகை காவ்யா மாதவன். இவருக்கு சொந்தமான ஆன்லைன் ஜவுளிக்கடை கொச்சி காக்கநாட்டில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஜவுளிக் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
நடிகை பாவனா காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது அதை செல்போனில் படம் பிடித்த காட்சி அடங்கிய மெமரிகார்டை நடிகை காவ்யா மாதவனின் ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஒருவரிடம் ஒப்படைத்ததாக போலீசாரிடம் பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
மேலும் பல்சர் சுனிலின் வக்கீல் பேனி பாலகிருஷ்ணனிடம் போலீசார் பாவனா கடத்தல் பற்றி விசாரித்த போது சுனிலுக்கு ஜாமீன் பெற்றுத்தருவது தொடர்பாக வக்கீல் உள்பட 2 பேர் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர்கள் ‘மேடத்திடம்’ பேசி விட்டு மீண்டும் வருவதாக கூறிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
‘மேடம்’ என்று அவர்கள் குறிப்பிட்டது நடிகை காவ்யா மாதவனாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் காவ்யா மாதவன் தனது தாயார் ஷியாமளாவுடன் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 11 மணி அளவில் காரில் வெளியில் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர் தனது தாயாருடன் தலைமறைவாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அடுத்தடுத்து நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோருக்கு எதிரான ஆவணங்கள் வெளியாகி உள்ளதால் அவர்கள் இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.