கோடி நலம் தரும் ஆடிவெள்ளி! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கோடி நலம் தரும் ஆடிவெள்ளி!

வ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை வருகின்றது. இருந்தாலும் ஆடி வெள்ளியும், தை வெள்ளியும் அம்பிகை அருள் தரும் வெள்ளியாகக் கருதப்படுகின்றது. பொதுவாகவே அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்கு உகந்த வெள்ளியில், பெண் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் பொன்னும் பொருளும் சேரும்; புதிய வாழ்க்கை மலரும்.
கோடி மாதங்கள் கிடைத்தாலும், ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது. காரணம் ஆடி மாதத்தில் தான் வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வது வழக்கம். ஆலயங்களிலும் கூட ஆடி மாதத்தில் விளக்கு பூஜை நடத்துவார்கள். சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில், அம்பிகையை நோக்கி விரதமிருந்தால் நாம் நினைத்தது நிறைவேறும். இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடி வந்து கொண்டே இருக்கும். துன்பங்கள் விலகி ஓடும் என்பது நம்பிக்கை.
ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா? பொருளா? என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, தெய்வத்தின் அருளோடு வரும் பொருள்தான் என்பது தெரியவரும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை நாம் ‘திருமகள்’ என்றும், ‘லட்சுமி’ என்றும் வர்ணிக்கின்றோம். எட்டுவகை லட்சுமியின் அருள் இருந்தால், நாம் பணமழையில் நனையலாம். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யலாம்.
லட்சுமி தேவி, நம் இல்லத்தில் வாசம் செய்தால், பணவரவு வந்து கொண்டேயிருக்கும். செல்வம் சேர்ந்தால், பசி, வறுமை நீங்கி வாழ்வில் வளம் கூடும். பொதுவாக லட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது, விளக்குஏற்றி வைத்து குங்குமம், சந்தனம், பூ சூட்டிய குடம் வைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, இனிப்புப் பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டின் பொழுது அஷ்டலட்சுமி வருகைப் பதிகம், துதிப்பாடல்கள் பாடி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு அகலும். கல்யாணக் கனவு நிறைவேறும். எந்தக் கோரிக்கையை நினைத்து வழிபட்டாலும் அது விரைவில் நடைபெறும்.
எனவே அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைத்தால் வாழ்வில் வளம் சேரும். வசதி வாய்ப்புகளும் பெருகும். ஆலயங்களில் வைக்கும் விளக்கு பூஜைகளில் கலந்து கொண்டால் வாழ்வில் ஏற்படும் கலக்கங்கள் அகலும். கனிவான வாழ்க்கை மலரும்.
வாழ்க்கை என்ற ‘கை’ சிறப்பாக அமைய ‘நம்பிக்கை’ என்ற கை தேவை. அந்த நம்பிக்கையை, அம்பிகை மீது வைத்து வழிபட்டால், துரத்தி வந்த துன்பங்கள் யாவும் ஓடி ஒளிந்து கொள்ளும்.
பால்கேட்டு அழுத பிள்ளைக்குச் சீர்காழிப் படித்துறையில் பால் கொடுத்தவள் அந்த அம்பிகை தான். அந்த ஞானப்பாலை உண்டதால் தான் ‘திருஞான சம்பந்தர்’ தெய்வீக மனிதரானார்.
பச்சை வெற்றிலையை எடுத்து, நாக்கில் ‘ஓம்’ என்று எழுதி, காளமேகத்தைப் ‘பாட்டரசன்’ ஆக்கியவள் அம்பிகை. வேல் கேட்ட முருகப்பெருமானுக்கு சக்திவேல் கொடுத்து, சூரனை சம்ஹாரம் செய்ய வைத்தவளும் அம்பிகை தான்.
புள்ளிருக்கு வேளூர் என்று வர்ணிக்கப் படும் வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் பார்க்கும் ஈஸ்வரனின் துணையாகி தையல்நாயகி என்ற பெயரில் இந்த வையகத்தை காத்து அருள் தருபவளும் அம்பிகைதான்.
அம்பிகையை ‘சக்தி’ என்று சொல்கின்றோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய், இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள் கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான்.
அந்த சக்தியைச் சாந்த வடிவில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், புவனேஸ்வரி என்றும் கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்தரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப் பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடை அம்மன் என்றும், சவுந்தரநாயகி என்றும், அங்கயற்கண்ணி என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.
மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும், ஆதிபராசக்தி என்றும், திரிசூலி என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடித்திருக்கிறார்கள். அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டுவர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.
எனவே கோடி நலம் தரும் ஆடி மாதத்தில் குடும்பப் பிரச்சினைகள் அகலவும், கூடுதல் நன்மை பெறவும் அம்பிகைக்குரிய ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்போம். சக்தி வழிபாடு நமக்கு சகல யோகத்தையும் வழங்கும்.

About UK TAMIL NEWS