“6ஆம் எதிரி சிவதேவன் துஷாந்தின் தலைமையிலேயே மாணவி வித்தியா கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
துஷாந்த் திருமணம் முடிப்பதாகக் கூறி வித்தியாவைக் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டுக்குள் வைத்து நண்பர்களுடன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்திவிட்டு வித்தியாவை கூட்டாகவே கொலை செய்தனர். அவர்களின் திட்டத்தின் பின்னணியில் சுவிஸ் குமாரும் இருந்துள்ளார்”
இவ்வாறு தீர்ப்பாயம் முன்னிலையில் 2 முக்கிய சாட்சிகள் நேற்றுச் சாட்சியமளித்தனர். மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயத்தின் இரண்டாம் நாள் அமர்வு நேற்றுக் காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் 2ஆவது மாடியிலுள்ள திறந்த மன்றில் கூடியது.
வழக்குத் தொடுனர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி பி. குமாரரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகள் நாகரத்தினம் நிஷாந்த், ஷகிப் ஸ்மாயில் , லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
1ம் ,2ம் , 3ம் , 5ம் மற்றும் 6ம் எதிரிகள் சார்பில் அரச தலைவர் சட்டத்தரணி சரங்க பாலசிங்க மற்றும் சட்டத்தரணி மகிந்த ஜெயவர்த்தன ஆகியோரும் 5ஆம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ஆம், 7ஆம் , மற்றும் 9ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் மன்றினால் 9 எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகியிருந்தார்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இரண்டாம் நாள் சாட்சி பதிவுகள் ஆரம்பமானது, அதன் போது இந்த வழக்கின் ஐந்தாவது சாட்சியும் சட்டமா அதிபரால் நிபந்தனைகளுடன் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட அரச சாட்சியுமான உதயசூரியன் சுரேஷ்கரன் சாட்சியம் அளித்தார். அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்ததாவது:
நான் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்தனான். பல வருடங்களாக கொழும்பில் கடை ஒன்றில் வேலை செய்தேன். இந்த வழக்கு தொடர்பில் கொழும்பு 4ஆம் மாடியை சேர்ந்த புலனாய்வு துறையினர் முதலில் என்னை கைது செய்து விசாரணை செய்த பின்னர் விடுவித்தனர். பின்னர் மீண்டும் நான் சில நாட்களில் கைது செய்யப்பட்டேன்.
இந்த வழக்கு தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவானின் சமாதன அறையில் எனது வாக்கு மூலத்தை வழங்கி இருந்தேன்.
ஒரு தலை காதல்கொலை செய்யப்பட்ட வித்தியாவை எனக்குத் தெரியும்.
அவரது குடும்பத்தினரையும் எனக்கு நன்கு தெரியும். வித்தியா எவரையும் காதலித்தாரா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் பெரியம்பி என அழைக்கப்படும் துஷாந்த் (6ஆவது எதிரியான சிவதேவன் துஷாந்த்) என்பவர் வித்தியாவை காதலிப்பதாக கூறினார்.
அதனால் நானும் பெரியம்பியும் வித்தியா பாடசாலை செல்லும் நேரம் பாடசாலையால் வீடு திரும்பும் நேரங்களில் தினமும் வித்தியாவின் பின்னால் பெரியம்பியின் மோட்டார் சைக்கிளில் சென்று வருவோம். அந்தவேளைகளில் வித்தியாவுடன் பெரியம்பி கதைக்க முற்படுவர். ஆனால் வித்தியா கதைக்க மாட்டார்.
வித்தியா சில வேளைகளில் அவரின் அண்ணாவுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலை சென்று வருவார். அண்ணா இல்லை என்றால் சைக்கிளில் சென்று வருவார்.
பெரியம்பியும் நானும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வித்தியாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று வந்தோம். அந்த வேளைகளில் அவருடன் கதைக்க முற்பட்டால் அவர் கதைப்பதில்லை. ஒரு நாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எனவும் வித்தியா பெரியம்பியிடம் கூறி இருந்தார்.
வித்தியா செருப்பால் எறிந்தார்
கொலை செய்யப்படுவதற்கு ஒன்று ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒருநாள் வித்தியா பெரியம்பிக்கு செருப்பால் எறிந்து பேசி இருந்தார். அப்போது நான் சொன்னேன் “அந்த பிள்ளைக்கு விருப்பம் இல்லை போல அந்த பிள்ளையை விடு” என்று.
காலையிலேயே கள்ளுக் குடிப்போம்
நாங்கள் புங்குடுதீவில் மாப்பிளை ( நடராஜா புவனேஸ்வரன் ) என்பவரிடம் கள்ளு வாங்கி குடிப்போம். அவர் சீவல் தொழில் செய்பவர். அவரின் வீட்டுக்கு நானும் என்னுடன் கொழும்பில் இருந்து வந்திருந்த சந்திரஹாசன் , நிஷாந்தன் , கண்ணா மற்றும் சசி என்போரும் கள்ளுகள் குடிக்க போறனாங்கள். காலையில் பத்து மணிக்கு முன்னர் நாம் கள்ளு குடிக்க போயிடுவோம்.
போதையில் வித்தியா வீட்டுக்கு சென்றனர்
சம்பவ தினத்துக்குச் சில நாட்கள் முன்னர் மாப்பிள்ளை வீட்டில் கள்ளு குடித்த பின்னர் , மதியம் 12 மணி போல பெரியம்பியும் நானும் கடற்கரை வழியாக வித்தியாவின் வீட்டுக்கு சென்று இருந்தோம். நான் வீட்டுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டேன். பெரியம்பி மாத்திரம் வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு ஒருவரும் வீட்டில் இல்லை என வந்து கூறினார்.
அன்று பின்னேரம் மீண்டும் கள்ளு குடிக்க போனோம். அப்போது எம்முடன் சந்திரஹாசனையும் அவரது வீட்டுக்கு சென்று அழைத்து சென்றோம். நாங்கள் கள்ளு குடித்துக்கொண்டு இருந்த நேரம், அங்கே தவக்குமார் மற்றும் ரவி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து கள்ளு குடித்தோம்.
அந்நேரத்தில் தவக்குமாருக்கும் ரவிக்கும் , பெரியம்பி வித்தியா தனக்கு செருப்பால் எறிந்து போட்டாள் என்று கூறினார். அதற்கு ரவி ‘ நீ வித்தியாவை காதலிக்கிறியா ? ‘ என கேட்டான். அதற்கு பெரியம்பி ஓம் என்று சொன்னான்.
வித்தியாவை தூக்கித்தாரேன்
பின்னர் போகும் போது ரவி, பெரியம்பிக்கு “ஏதேனும் உதவி தேவை என்றால் சொல்லு, வித்தியாவை தூக்கி தாறது என்றால் தூக்கி தாரேன் “ என சொன்னார். அதற்கு பெரியாம்பி தேவை என்றால் சொல்லுறேன் என சொன்னார்.
அதன் பிறகு இரண்டு மூன்று நாள் கழித்து நாங்கள் மாப்பிள்ளை வீட்டில் கள்ளு குடித்துக்கொண்டு இருந்தபோது, அங்கே வந்த ரவியிடம் வித்தியாவை தூக்கி தர சொல்லி பெரியம்பி கேட்டார். அப்போது அந்த இடத்தில் நானும் பெரியம்பி, ரவி, சந்திரஹாசன் மற்றும் தவக்குமார் ஆகியோர் இருந்தோம்.
வித்தியாவைக் கடத்த ரூபா 20,000 பேரம்
வித்தியாவை தூக்கி தாறது என்றால் எனக்கு 20 – 23 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என ரவி பெரியம்பிக்கு கூறினார். அதற்கு பெரியம்பி தான் சம்பளம் எடுத்த உடனே பணத்தை தருகிறேன் எனக் கூறினார். அதன் படி ரவிக்கு பெரியம்பி பணம் கொடுத்தார். வித்தியாவை தூக்கி தர கூறி என தனது சாட்சியத்தை அளித்தார்.
அதன் போது எவ்வளவு பணம் ரவிக்கு கொடுக்கப்பட்டது என பிரதி மன்றாடியார் அதிபதி சாட்சியிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த கேள்விகளுக்கு நான் பதில் அளித்தால் எனது அம்மா மற்றும் தங்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என “தீர்ப்பயம் முன்னிலையில் கூறினார்.
சாட்சிக்கு பாதுகாப்பு வழங்க முடியும்
நான் இந்த விடயத்தைச் சொன்னால் (மன்றில் சாட்சி சொல்வதனால்) என்னுடைய அப்பா, அம்மாவுக்கு ஏதாவது பிரச்சினை வருமா? என்று சாட்சி தீர்ப்பாயத்திடம் கேட்டார். “அப்படி பிரச்சினைகள் ஏற்படாது. நீங்கள் சுயமாகத் தானே வாக்குமூலம் அளிக்க வந்தீர்கள்? நீங்கள் நீதிமன்றுக்கு உண்மையைச் சொல்வதால்தான் சட்டமா அதிபர் தரப்பு உங்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கினார்கள்” என்று தீர்ப்பாயம் சாட்சிக்கு தெரிவித்தது.
“எனக்கு அம்மாவும் தங்கச்சியும்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதனால் ஏதாவது பிரச்சினை வருமோ? என்று பயப்படுகின்றேன்” என்று சாட்சிக் கூண்டில் நின்றபடியே சுரேஸ்கரன் அச்சம் வெளியிட்டார்.
“நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் சாட்சி சொல்வதாக நீங்கள்தான் கூறினீர்கள். உங்களுடைய தங்கைக்கும் தாயாருக்கும் உரிய பாதுகாப்பை மன்று வழங்கும். எனவே நீங்கள் பயமின்றி சாட்சியமளிக்கலாம்” என்று தீர்ப்பாயம் சாட்சியிடம் தெரிவித்தது.
வழக்குத் தொடுனர் மற்றும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளுடனும் தீர்ப்பாயம் கலந்துரையாடியது. சாட்சியின் பாதுகாப்புக் கருதி மூடிய மன்றில் சாட்சியப் பதிவு இடம்பெறவுள்ளதால் செய்தியாளர்கள் மற்றும் பார்வையாளர்களை திறந்த மன்றிலிருந்து செல்லுமாறு தீர்ப்பாயம் கேட்டுக் கொண்டது. பின்னர் மூடிய மன்றில் சாட்சி சாட்சியமளித்தார்.
தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு 3ஆவது சாட்சியான மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியப் பதிவு நடைபெற்றது.
“நான் கள்ளுச் சீவறனான். பெரியாம்பியும், சுரேசும் (சுரேஸ்கரன்), ஆகியோரும் வழமையாக எனது வீட்டுக்கு வந்து கள்ளு வாங்குவார்கள். அவ்வாறே ஒருநாள் எனது வீட்டுக்கு வந்த பெரியாம்பி, “வித்தியாவைக் காதலிப்பதாகவும் அவரைத் திருமணம் செய்யப்பேவாதாகவும் என்னிடம் கூறினார்.
சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு என்னை வித்தியா பாடசாலைக்குச் செல்லும் வழியால் கூட்டிக்கொண்டு போனனார்கள். சம்பவம் இடம்பெற்ற அன்று வித்தியா இன்னொரு பிள்ளையுடன் பாடசாலைக்குச் சென்றார்.
ஆலடிச் சந்தியால்தான் வித்தியா வருகிறவா, நான் அவளைக் காதலிக்கிறேன். கலியாணம் செய்யப்போகிறேன் என்று கூறித்தான் பெரியாம்பி என்னக் கூட்டிக்கொண்டு போனவர். என்னையும் சரேஸ்கரனையும் ஒளிந்திருந்து பார்க்கச் சொல்லி பெரியாம்பி சொன்னவர். ஜெயக்குமாரும் தவக்குமாரும் அந்த இடத்துக்கு வந்தவர்கள்.
வித்தியா கடத்தல்
அவர்கள் இருவரும் வித்தியாவுக்கு அருகில் சென்று அவரைக் கட்டிப்பிடித்தவர்கள். பாடசாலை வெள்ளைச் சீரூடையுடன்தான் வித்தியா வந்தவர். சப்பாத்துப் போட்டிருந்தவர். சைக்கிள் கூடைக்குள் குடையிருந்தது. பெரியாம்பியும் சந்திரகாசனும் பற்றைக்குள் வித்தியாவை இழுத்துக்கொண்டு சென்றார்கள்.
பின்பு வித்தியா அணிந்திருந்த உடுப்புக்கள் அனைத்தையும் கழற்றினவர்கள். நான் அங்காலப் பற்றைக்குள் நின்று பார்த்துக்கொண்டு நின்றனான். சுரேஸ்கரனும் அவர்களைப் பாரத்த்துக்கொண்டு நின்றவர்.
கதறக் கதற வன்புணர்வு
பெரியாம்பி வித்தியாவைப் பார்த்து நான் காதலிப்பது உனக்கு விருப்பமில்லையா? என்று பேசினார். அந்த நேரம் வித்தியா ஐயோ விடுங்கடா ஐயோ விடுங்கடா என கதறினார். வித்தியாவின் வாயைப் பெரியாம்பி பொத்தினார். உடுப்பைக் கழற்றிய இடத்தில் இருந்து பிள்ளையை வன்புணர்வு செய்த இடத்துக்கு இழுத்துக்கொண்டும், கைத்தாங்கலாகவும் கொண்டு சென்றார்கள்.
வித்தியா கதறி அழுதும் சந்திரகாஸூம் பெரியாம்பியும் அவரை விடவில்லை. அந்த நேரம் ஒரு பாழடைந்த வீட்டுக்குள் வித்தியாவை அவர்கள் கொண்டு சென்றார்கள். செந்தில், ரவி, பெரியாம்பி, சந்திரகாஸ் இவர்கள் நான்கு பேரும்தான் அந்த பாழடைந்த வீட்டுக்குள் சென்றவர்கள். நான் அந்த நேரம் கத்திக்கொண்டு ஓடத் தயாராகினான். பெரியாம்பி கத்தியக்காட்டி நின்று ஆக்கள் யாரும் வருகிறார்களா? எனப் பார்த்துக்கொள் என்றார்.
சுரேஸ்கரனும் பற்றைக்குள் நின்றார். அந்த வீட்டுக்குள் வைத்து பிள்ளையை மாறி மாறி ஒளிப்படம் எடுத்தார்கள். பெரியாம்பியும் சந்திரகாஸூம் பிடிக்க ஏனையவர்கள் ஒளிப்படமும் எடுத்தார்கள். முதலில் வித்தியாவை பெரியாம்பிதான் வன்புணர்வுக்குட்படுத்தினார். இரண்டாவதாக சந்திரகாஸூம் மூன்றாவதாக செந்திலும் சந்திரகாஸ் ஒளிப்படம் எடுக்க ஜெயக்குமார் வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தினார்.
பின்புதான் அந்தப்பிள்ளை மயங்கி விட்டது. ஒளிப்படம் எடுத்து சுவிஸ்குமாருக்கு கொடுக்க வேண்டும் என்றும் அவர் வெளிநாட்டுக்கு கொண்டு போகப் பொறார் என்றும் அவர்கள் கதைத்துக்கொண்டனர்.
ஓளிப்படம் எடுத்தனர்
பெரிய தொடுதிரை அலைபேசி கொண்டுதான் ஒளிப்படம் எடுத்தார்கள்.பிறகு கைத்தாங்கலாக பிள்ளைய தூக்கிக்கொண்டு வந்து அலரி மரத்தில கட்டினார்கள். கூப்பிடு தூரத்தில்தான் நான் நின்றேன். பிள்ளையின் வெள்ளைச் சீரூடையின் சட்டையின் இடுப்புப்பட்டியால் கைகள் இரண்டையும் கழுத்துப்பக்கமாக வளைத்துக் கட்டினார்கள். பின்பு கால்களை விரித்து சப்பாத்து நூல்களினால் அலரி மரத்து கிளைகளுடன் கட்டினார்கள். பின்பு பிள்ளையின் ஆடைகளை அவரது உடம்பின் மேல் போட்டார்கள்.
பிறகு நான் சீவலுக்கு போறதுக்காக வீட்ட போய்விட்டேன். பின்னர் காலை 9.30 மணிக்கு அந்த நான்கு பேரும் கள்ளுக்குடிப்பதற்காக வீட்டுக்கு வந்தார்கள். பின்னேரமும் வந்தார்கள். நான் மழை என்றதும் சீவவில்லை. சந்திரகாசன், பெரியாம்பி மூன்று பேர் வந்தார்கள். கள் சீவவில்லை என்றதும் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.சிறிது நாட்கள் கழித்து என்னை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டினார்கள். நான் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இது பற்றி வாக்குமூலம் அளித்தேன்.
சுவிஸ்குமாரை எனக்கு அறிமுகப்படுத்தியது சுரேஸ்கரன்தான். சுவிஸ்குமாரின் மனைவியின் தம்பிதான் பெரியாம்பி. சுவிஸ்குமார் வெளிநாட்டுக்கு கொண்டு போறதுக்குத்தான் காணொலி எடுத்ததாகப் பெரியாம்பி கூறினார்.
எதிரிக்கூண்டில் 6ஆவது இலக்க எதிரிதான் பெரியாம்பி என்று கூறப்படும் துசாந்தன், 5ஆம் எதிரி சந்திரகாஸ்,3ஆம் எதிரி தவக்குமார், 2ஆம் எதிரி ஜெயக்குமார், 9ஆம் எதிரி சுவிஸ்குமார், 4ஆம் எதிரி சசி,7ஆம் எதிரி நிசாந்தன், 8ஆம் எதிரி கண்ணன் எதிரிகளைச் சாட்சி அடையாளம் காட்டினார். கூடையையும் சீற்றையும் வைத்து இது வித்தியாவினுடைய சைக்கிள்தான் என அடையாளம் காட்டினார்