தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல்களை இலங்கைக்குக் காட்டி கொடுத்தது நாங்கள்தான் என அமெரிக்கா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது.
தமிழீழத்துக்கான இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பல நாடுகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்டன. இந்த தகவல்களின் அடிப்படையில் இலங்கை கடற்படை அந்த கப்பல்களை அழித்தது.
2006-ம் ஆண்டு முதல் 2009 வரையில் ஆயுத கப்பல்கள் விடுதலைப் புலிகளின் கைகளுக்கு செல்லாதவாறு பல நாடுகளும் முந்திக் கொண்டு இலங்கைக்கு சேவகம் செய்தது. இப்போது நாங்களே புலிகளின் ஆயுதக் கப்பல்களை காட்டி கொடுத்தோம் என மார்தட்டுகிறது அமெரிக்கா.
இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ராபர்ட் பிளேக் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இதைத் தெரிவித்தார். அப்போது, விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழிக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல்கள் தொடர்பான தகவல்களை இலங்கைக்கு கொடுத்தோம். இலங்கைதான் அந்த கப்பல்களை தாக்கி அழித்தது என கூறியுள்ளார்.