தவறான தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டில் அவருடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த பஸ் சாரதியைத் தேடி வந்த அவரது மனைவியும் இரு பிள்ளைகளும் சாரதியையும் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணையும் தாக்கி பெண்ணின் நாலரை அடி நீளமான தலைமயிரை வெட்டி எறிந்துள்ள சம்பவ மொன்று இடம்பெற்றதாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்திலிருந்து தெரியவந்துள்ளது.
நள்ளிரவில் ஜா–எல, வஹதியகம என்ற இடத்திலுள்ள வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு பலாத்காரமாக உள்நுழைந்த சாரதியின் மனைவியும் அவரது பிள்ளைகளும் சாரதியையும் அவர் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணையும் தாக்கி அவரது நாலரை அடி நீளமான தலை மயிரை வெட்டி எறிந்துள்ளனர்.
இதற்கும் மேலதிகமாக அவர்கள் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கியமை, கதவை உடைத்து பலாத்காரமாக உள்நுழைந்தமை, பெண்ணின் தலைமயிரை வெட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக கட்டான கிழக்கைச் சேர்ந்த சாரதியின் மனைவியையும் இரு பிள்ளைகளையும் கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவத்துடன் பிரதானமாக தொடர்புடைய 42 வயதான தனியார் பஸ் சாரதி தனது மனைவி இருக்கும் போதே 32 வயதான அழகிய திருமணமான பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
இக்கள்ளத் தொடர்பை நிறுத்தும்படி சாரதியின் மனைவி தனது கணவரிடமும் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணிடமும் அவ்வப்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருந்தும் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். சம்பவ தினத்தன்று சாரதி சுற்றுலா பயணமொன்று செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
இருந்தும் இது தொடர்பாக சந்தேகம் கொண்ட மனைவி தனது இரு பிள்ளைகளுடன் நள்ளிரவு 2.00 மணியளவில் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக் கதவை பலாத்காரமாக உடைத்து உள்நுழைந்த மனைவி மேற்படி களேபரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் தலைமயிரை வெட்டியதற்காக 14000 ரூபா நஷ்டஈடு வழங்க சந்தேக நபர்கள் முன்வந்தனர். இருந்தும் மனைவியையும் இரு பிள்ளைகளையும் தலா ஒரு இலட்ச ரூபா பிணையில் செல்லும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.