இலங்கையில் பெரும்பாலான இடங்களில் காணப்படும் பெயர்ப் பலகைகளில் தமிழ்க் கொலை இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல.
இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மொழி சார்ந்த பிரச்சனைகளை இல்லாது செய்தால் பாதித் தீர்வு கிடைத்துவிடும் என அதற்குப் பொறுப்பான அமைச்சர் மனோ கணேசன் கூறினாலும் தமிழில் காணப்படும் எழுத்துப் பிழைகள் இன்னமும் திருத்தப்படாமலேயே காணப்படுகின்றது.
சில எழுத்துப் பிழைகள் தமிழில் மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் கரிசனைக்கு உரியதாகவே காணப்படுகின்றது.
அந்த வகையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் வவுனியா மாவட்டத்தின் பெயர் வவ்நியா மற்றும் வவுனி என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டியிலிருந்து வவுனியா நோக்கி புறப்படுவதற்கு கண்டி பேரூந்து நிலையத்திற்குச் சென்ற பொதுமகன் ஒருவர் வவுனியா செல்லும் பேரூந்தினை தேடியுள்ளார்.
பேரூந்து அவருக்கு முன்னால் தரித்து நின்ற போதும் வவுனியாவின் பெயர் வவ்நியா என பெயரிடப்பட்டிருந்ததால் அப் பேரூந்தை வேறு இடத்திற்கு செல்லும் பேரூந்து என நினைத்து வவுனியா செல்லும் பேரூந்தினை தேடிய சுவாரஸ்ய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
கண்டி மற்றும் மஹியங்கனை போக்குவரத்துச் சபைகளுக்கு சொந்தமான பேரூந்துகளிலேயே இவ்வாறு எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.