இலங்கையின் ஜாஎல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் இளைஞர்கள், யுவதிகள் இணைந்து இன்று நடத்திய விருந்து தொடர்பில் பதற்றமான நிலை காணப்பட்டதாக கொழும்பைச் சேர்ந்த ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் எதிர்ப்புக் காரணமாகவே இந்தப் பதற்ற நிலை காணப்பட்டதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெளிப்பிரதேசத்திலிருந்து வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் போதைப் பொருள் பாவனையோடு அந்த விருந்தை நடத்தியதாலேயே தாம் எதிர்த்ததாக பிரதேச மக்கள் தரப்பில் கூறப்பட்டது.
தகவலறிந்த பொலிஸார் நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவர்களை சோதனையிட்டதாகவும் இது தொடர்பில் எவ்வித குற்றங்களையும் காரணம் காட்டி யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது.
பொது மக்களின் எதிர்ப்பினையடுத்து விருந்திற்கு வந்த இளைஞர் யுவதிகள் சிலர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களின்மூலம் அறிமுகமாகும் நண்பர்களின் விருந்து என்று பின்னர் தெரியவந்தது.