வடமாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண அமைப்பு பதவியை கோரியிருந்த உறுப்பினர் ஒருவரின் கோரிக்கையை நிராகரித்து வடமாகாண முதலமைச்சர் எழுதியுள்ள பதில் கடிதத்தை தொடர்ந்து இந்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், “வடமாகாண சபையில் அண்மையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலையை அடுத்து இரு அமைச்சு பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டிருந்தன.
இதனையடுத்து, அமைச்சு பதவிகளில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மாகாண சபை உறுப்பினர்களிடம் சுயவிபர கோவையை கோரியிருந்தார்.
இந்நிலையில், சுயவிபர கோரிக்கை அனுப்பியிருந்த உறுப்பினர்களில் ஒருவருக்கு முதலமைச்சர் பதில் அனுப்பியிருந்தார்” என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறித்த உறுப்பினருக்கு அமைச்சு பதவி வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
“ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் அமைச்சு பதவி வழங்க முடியாமல் இருப்பதாக” அந்த கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது குறித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை சந்தேகநபர் ஒருவர் மாகாண சபை உறுப்பினராக இருப்பது அரசியல் அவதானிகளினால் விமர்சிக்கப்படுகின்றது.
குறித்த உறுப்பினர் முதலமைச்சர் ஆதரவு அணியில் இருப்பதாகவும், அதனை தெரிந்து கொண்டு முதலமைச்சர் அந்த உறுப்பினரின் தயவை பெற்றுக்கொண்டுள்ளார் என அரசியல் அவதானிகளினால் விமர்சிக்கப்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.