புத்தரின் உருவப்படத்துடனான ஆடை அணிந்த இந்திய சுற்றுலா பயணி ஒருவர் இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தரின் உருவத்துடனான ஆடை அணிவது இலங்கை தீவினுள் உணர்ச்சிமிக்க ஒரு விடயமாகும். 2014ஆம் ஆண்டு பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர், புத்தரின் உருவத்தை பச்சை குத்தியமையினால் நாடு கடத்தப்பட்டார்.
26 வயதான இந்திய சுற்றுலா பயணி ஒருவர் தனது குடும்பத்துடன் தெற்கு கரையோர பகுதியான பென்தொட்டவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர்.
அந்த குடும்பத்தினர் கொழும்பில் இருந்து செல்வதற்கு முன்னர் ஒரு கடை ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்ய சென்றுள்ளனர்.
“நாங்கள் கவுண்டரில் பணம் செலுத்தி கொண்டிருந்த போது மூன்று பொலிஸார் எனது மருமகளை கைது செய்ய வேண்டும் என கூறினார்கள். நாங்கள் பயந்துவிட்டோம் என குறித்த இளம் பெண்ணின் அத்தையான தீபம் என்ற பெண் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த குடும்பத்தினர் பொலிஸாரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். அவர்கள் இலங்கைக்கு எதிரான குற்றங்களை செய்ய விரும்பவில்லை” என பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த குடும்பத்தின் இன்னும் ஒருவர் கடைக்குள் சென்று வேறு ஒரு ஆடையை கொண்டு வந்து அணிந்திருக்கும் ஆடைக்கு மேல் அணிந்து கொள்ளுமாறு கூறினார்.
எனினும் பொலிஸார் அதனை அனுமதிக்கவில்லை. தம்முடன் பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என பொலிஸார் கூறியுள்ளர்.
அதன் பின்னர் அந்த குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் ஒன்றை வழங்கியதோடு மன்னிப்பு கோரியுள்ளனர். அதனை தொடர்ந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டுள்ளார்.