விசாரணைக்குழு இரு அமைச்சர்களைத்தான் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைந்திருந்தபோதே, நான்கு அமைச்சர்களையும் மாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் தலைவர், முதலமைச்சருக்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
பிழையே செய்யாத என்னை மாற்றுவதற்கு எமது கட்சியின் தலைமை முன்னரே முடிவெடுத்து விட்டு, இப்போது யாப்பு விதிகளை மீறி விட்டதாகச் சப்பைக்கட்டுக் காரணங்களை புனைந்து கொண்டிருக்கின்றனர்.
பிழை செய்யாதவரை நீங்கள் திட்டமிட்டுச் சதி செய்து வெளியே அனுப்புவதற்குரிய தண்டனைகளைக் கடவுள் நிச்சயம் வழங்குவார்.
இவ்வாறு வடக்கு மாகாணப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வவுனியாவில் வைத்து ஊடகவியலாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
முதலமைச்சருக்கு எதிராகக் கையெழுத்திட்டமை தொடர்பில் விளக்கம் கோரி எனக்குக் கடிதம் அனுப்பப்பட்ட நேரத்தில், என்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாகத் தெரி வித்து அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு முதலமைச்சருக்குக் கட்சிச் செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார்.
முதலமைச்சர் நியமித்த விசாரணைக்குழு என்னை விடுவித்த பின்னரும், நான் ஊழல் செய்யவில்லை என்று தெரிந்த பின்னரும் என்னைப் பதவி நீக்க முதலமைச்சருக்கு எனது கட்சி இணக்கம் தெரிவித்தது. கட்சியில் இருக்கின்ற அமைச்சர் ஊழல் செய்யவில்லை என்றால் அவரைப் பாதுகாக்கவேண்டும்.
ஆனால் அதைவிடுத்து என்னை அமைச்சுப் பதவியிலிருந்து வெளியேற்றவேண்டும் என்பதில் கட்சித் தலைமை குறியாக இருந்தமையை இதிலிருந்து அறிய முடியும்.
நான் விசாரணைக்குழுவில் தோன்றமாட்டேன் என்பதால் எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். விசாரணைக் குழு முன்பாக நான் தோன்றமாட்டேன் என்று சொல்லவில்லை.
சட்டரீதியான – சுயாதீனமான எந்தவொரு விசாரணைக் குழு முன்னிலையிலும் தோன்றுவதற்குத் தயாராக இருக்கின்றேன் என்று திரும்பத் திரும்பக் கூறியுள்ளேன்.
தெரிவுக் குழுவை அமைக்குமாறு முதலமைச்சரைக் கோரியிருந்தேன். அதைச் செய்யத் துணிவில்லாத முதலமைச்சர், நான் தன்னால் நியமிக்கப்படும் விசாரணைக்குழு முன்பாகத் தோன்றமாட்டேன் என்பதற்காக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றார் -– என்றார்.