செல்வம் அடைக்கலநாதன் எம்.பி பிணையில் விடுதலை!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி பிணையில் விடுதலை!!

அனுராதபுரம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகிய போது அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
2000ஆம் ஆண்டிலிருந்து 2009 வரை வவுனியாவில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ மீள் தொலைக்காட்சி ஒளிபரப்பை மேற்கொண்டு வந்தது.
வன்னியில் இறுதிக்கட்டபோர் நடந்து கொண்டிருந்தபோது, தமிழ் மக்களுக்கு எதிராக நடந்து கொண்டிருந்த கொடுமைகளை ஒளிபரப்பு செய்தமைக்காக, ஒளிபரப்பு நிலையம் சுற்றி வளைக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதன் போது ரெலோ இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக வவுனியா நீதிமன்றத்தில்இடம்பெற்று வந்த நிலையில் தற்போது குறித்த வழக்கு விசாரணை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணைகள் இடம் பெற்று வந்தன.
கடந்த மாதம் அனுராதபுரம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திடீர் சுகவீனம் காரணமாக மன்றில் ஆஜராகாத நிலையில் வைத்திய அத்தாட்சிப்பத்திரம் மன்றில் சமர்ப்பித்துள்ளார்.
இந்த நிலையிலே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையாகியிருந்தார்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கருணாகரன் (ஜனா) ஆகியோர் பிணை கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

About UK TAMIL NEWS