ஆஸ்திரேலியாவில் கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், லாரிஸ்சா வாட்டர்ஸ் (வயது 40) ஆவார். இந்தப் பெண் எம்.பி., பாராளுமன்றத்தில் தன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியவர். குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியவாறு அவர் பாராளுமன்றத்தில் பேசிய படக்காட்சி, உலகமெங்கும் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பெண் எம்.பி., லாரிஸ்சா வாட்டர்ஸ், பதவி விலகி உள்ளார். அவர் இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதே பதவி விலகலுக்கு காரணம் ஆகும்.
ஆஸ்திரேலிய நாட்டு அரசியல் சாசனத்தின்படி, இரட்டை குடியுரிமையோ, பல நாட்டு குடியுரிமைகளோ பெற்றிருக்கிற ஒருவர் எம்.பி.யாக பதவி வகிக்க முடியாது. அங்கு ஏற்கனவே கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த ஸ்காட் லுத்லாம் என்ற எம்.பி.யும் இரட்டை குடியுரிமை சர்ச்சையால் சமீபத்தில் பதவி இழந்தார்.
இந்த நிலையில், இப்போது லாரிஸ்சா வாட்டர்ஸ் பதவி இழந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் பெண் எம்.பி., 11 மாத குழந்தையாக இருந்தபோது கனடாவை விட்டு தனது ஆஸ்திரேலிய பெற்றோருடன் ஆஸ்திரேலியாவுக்கு இடம் பெயர்ந்துவிட்டார்.
இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் அவர் பேசும்போது, “70 ஆண்டு கால கனடா சட்டங்களின்படி நான் பிறப்பில் இருந்து இரட்டை குடியுரிமை கொண்டவள் என்பதை அறிய வந்து, மனம் உடைந்து போனேன். நான் குழந்தையாக இருந்து ஒரு வார்த்தை பேசும் முன்பாகவே எல்லாம் நடந்து முடிந்து விட்டது” என கூறினார்