யாழ்ப்பாணம் நல்லூரில் நேற்றைய தினம் இடம்பெற்ற அசம்பாவித சம்பவத்தினால் பலியான மெய்ப்பாதுகாவலரின் அஞ்சலி நிகழ்வு நாலைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர்களால் முன்னெடுக்கப்பட இருக்கும் இந்த அஞ்சலி நிகழ்வு தொடர்பாக இளைஞர் அணி என்ற அமைப்பின் பேரில் ஊடக அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முழு வடிவம் வருமாறு,
நேற்று (22.07.2017 சனிக்கிழமை) மாலை நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நேரடியாக தன்னை இலக்கு வைத்தே நடத்தப்பட்டதாக நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவித்திருந்தார். இது நீதித்துறை மீது நேரடியாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே நாம் கருதுகிறோம். இந்த சம்பவத்துக்கு பலர் பலவிதமான விளக்கங்களை கூறுகின்றனர்.
எது எவ்வாறு இருப்பினும் இந்த சூட்டுச்சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் இளைஞர்களாகிய நாம் இந்த சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்டம் சிலாபத்தைச்சேர்ந்த மெய்ப்பாதுகாவலர் (உப பொலிஸ் பரிசோதகர்) ஹேமச்சந்திரவுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை இந்த சம்பவத்தில் பொலிசார் பக்கச் சார்பற்று முழுமையான நீதியான விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என நாட்டின் நீதித் துறைமேல் நம்பிக்கை வைத்துள்ள குடிமக்கள் அனைவரின் சார்பாக நாம் இந்த வேண்டுகோளை விடுக்கிறோம்.
அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டறிவதுடன் நாட்டில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த உபபொலிஸ் பரிசோதகர் #கணேவத்தகே #சரத் #ஹேமச்சந்திர அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று நாளை (24) மாலை 5.45 மணிக்கு நல்லூர் ஆலய பின் வீதியில் நடத்த தமிழ் இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் நீதியையும், மனிதத்தையும் மதிக்கும் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுசார்பில் அழைப்பு விடுக்கிறோம்.
நன்றி.
தமிழ் இளைஞர் அணி.