திரைப்பட காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது, அவர் மனைவி கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொளத்தூர் சாஸ்திரி நகர் 2வதுதெருவை சேர்ந்தவர் திரைப்பட காமெடி நடிகர் தாடி பாலாஜி. ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். இவரது மனைவி நித்யா. இருவரும் காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆரம்ப காலத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களுக்குள், கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்த வந்தது. கடந்த மாதம் 23ம் திகதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நித்யா, மாதவரம் பொலிசில் புகார் செய்தார்.
அதில், தனது கணவர் தாடி பாலாஜி, தன்னை ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டுவதாகவும், தன் மீது சந்தேகப்பட்டு அடித்து உடைப்பதாகவும், ஏற்கனவே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இந்த புகார் மீது பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நித்யா,கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை காவல் நிலையம் சென்றார். ஆனால், பொலிஸார் எந்த நடவடிக்கையும் இல்லை. அதுபற்றி கேட்டபோது, பாலாஜியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவரிடம் விசாரணை செய்த பின்னரே, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என நித்யாவிடம் போலீசார் தெரிவித்ததாக தெரிகிறது.இதற்கிடையில் தாடி பாலாஜி, போலீசார் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என கருதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1ம் திகதி நித்யா, சென்னை மாநகர பொலிஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தனது மகளுடன் சென்றார். அங்கு, தனது புகார் மீது மாதவரம் பொலிஸார், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கமிஷனரின் உத்தரவின்பேரில், மாதவரம் இன்ஸ்பெக்டர் சங்கர், வன்கொடுமை, அடித்து காயப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
தற்போது தாடி பாலாஜி தலைமறைவாக உள்ளார். அவரை எந்த நேரத்திலும் பொலிஸார் கைது செய்வார்கள் என தெரிகிறது.