மாணவியொருவரை முச்சக்கரவண்டியில் அழைத்துவந்து காதலீலையில் ஈடுபட்ட இளைஞனை பொலிஸார் கைதுசெய்யமுற்பட்டவேளை குறித்த இளைஞன் பொலிஸாரின் கையை கடித்துவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
கண்டி மகளிர் பாடசாலை ஒன்றில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் 17 வயது மாணவியொருவரை ஹங்குரான்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகுரதலே பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞன் தனது முச்சக்கர வண்டியில் அழைத்துச்சென்றுள்ளார்.
இவ்வாறு மாணவியை அழைத்துக்கொண்டு கண்டியிலிருந்து 40 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஹகுரதலே பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் வைத்து காலை முதல் மாலை வரை காதல் லீலை புரிந்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் மாணவி சீருடையில் இருந்ததை அவதானித்த கிராம மக்கள் கிராம அலுவலர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தகவல் கிடைத்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து முச்சக்கரவண்டியில் இருந்த இளைஞனையும் மாணவியையும் கைதுசெய்ய முற்படுகையில் குறித்த இளைஞன் பொலிஸ் அதிகாரியொருவரின் கையை கடித்து தப்பித்துச்செல்ல முயற்சி செய்துள்ளார்.
உடனடியாக பொலிஸார் இருவரையும் கைதுசெய்து பொலிஸ் நிலையத்திற்கு மேலதிக விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளனர்.