இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.
வடக்கு, கிழக்கை சேர்ந்தவர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்தவர்களாக கருதப்பட உள்ளனர். கிராம சேவையாளரின் சான்றிதழ் இன்றி இந்த வாக்குரிமை வழங்கப்பட உள்ளது.
இடம்பெயர்ந்த குடும்பம் எமது வீட்டுக்கு அருகில் தான் இருந்தது என அயல் வீட்டவர் ஒருவர் கூறினால் இதற்கு போதுமானது. அந்த குடும்பம் வெளிநாட்டில் தற்போது வசித்தால், அவர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படும்.
இது சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிகாரித்து கொள்ள முன்னெடுக்கப்படும் தந்திரமான நடவடிக்கை.
எதிர்வரும் புதன் கிழமை காணாமல் போனவர்கள் தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் கைச்சாத்திட்ட சர்வதேச இணக்கப்பாடு தொடர்பான சட்டமூலம் கொண்டு வரப்பட உள்ளது.
இது காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்த தனியான நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம்.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், கனடாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியை சேர்ந்த இலங்கையர் ஒருவர் தனது சகோதரனை ஒரு இராணுவப் பிரிவு, சம்பந்தப்பட்ட அதிகாரியின் பொறுப்பில் இருந்த போது கடத்திச் சென்று காணாமல் போனதாக கனடாவில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.
இதனையடுத்து இங்கு வழக்கு விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரியை கைது செய்து அங்கு அனுப்பி வைக்குமாறு கனேடிய அரசாங்கத்தினால் கோர முடியும்.
இந்த இரண்டு சட்டமூலங்களும் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவை என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.