பொலனறுவை மெதிரிகிரிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஒரு பாடசாலையில் 41 மாணவ, மாணவிகள் தமது கைகளை வெட்டிக் கொண்டிருந்த நிலையில் பொலிஸார் பொறுப்பேற்று பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ள நிலையில் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் திஸ்ஸ லால் டி சில்வாவின் கீழ் சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒன்றை பயன்படுத்திய மாணவர்கள் அதன் தாக்கத்தால், தமது கைகளில் பிளேட்டாலும், சட்டைப் பின்களாலும் வெட்டிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
10 ஆம் மற்றும் 11 ஆம் ஆண்டு மாணவர்களே இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் 41 மாணவர்களில் 32 பேர் தமது கைகளை காயப்படுத்திக் கொண்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
இவர்களில் 7 பேர் மாணவிகள் எனவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின. பாடசாலையின் உப அதிபர் மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவர்களை பரிசோதித்த போது கைகளில் வெட்டுக்காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக பொலிஸாருக்கு உப அதிபர் அறிவிக்கவே பாடசாலைக்கு வந்த மெதிரிகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் என்.ஜி.எஸ். ஜயலத், மாணவியரை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு ஏனையோரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளார். மாணவர்களை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து செல்லும் போது ஒரு மாணவனின் கையில் இருந்து அவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதைப் பொருள் அடங்கிய பை வாகனத்துக்கு வெளியே வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து அதனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட மாணவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மாணவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போதைப்பொருள் எப்படி பாடசாலைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் இதனை யார் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்தனர் என்பது குறித்தும் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று விஷேட பொலிஸ் குழுவொன்று குறித்த பாடசாலைக்கு சென்று சாட்சிப் பதிவுகளை முன்னெடுத்திருந்த நிலையில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லக்சிறி விஜேரத்னவின் நேரடி கட்டுப்பாட்டில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.