ஆந்திரா போலீஸால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட பத்மாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எந்தவித தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று வெடிக்கிறார் பத்மாவின் கணவர் விவேக்.
கடந்த ஜூன் 3-ம் தேதி கேரளாவில் இருந்து ஹைதராபாத் செல்லும் ரயிலில் பயணித்த பத்மா ஆந்திர மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவரை ஆந்திர மாநிலம் நக்சல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
மிக நீண்ட கண்காணிப்புக்குப் பிறகு, பத்மா ரயிலில் வருவதைத் தெரிந்துகொண்டு, அவரை ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் பத்மா. இவர் மாவோயிஸ்ட் இயக்கங்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து 2006-ம் ஆண்டில் பிணையில் வெளிவந்த அவர், அதன்பிறகு பல்வேறு சமூகப் போராட்டங்களிலும் பெண்கள் போராட்டங்களிலும் பங்கேற்றுவந்தார். இந்த நிலையில்தான் பத்மா அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார் .
இது குறித்து தமிழக காவல்துறையினருக்கும் முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்ட பத்மா, கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் சரியின்றி இருந்துள்ளார். இதனால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார் பத்மாவின் கணவர் விவேக்.
இது குறித்து பத்மாவின் கணவர் விவேக்கிடம் பேசியபோது, "இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கியூ பிரான்ச் போலீஸார், தமிழக காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று மறுத்துவிட்டனர்.
மேலும் ஆந்திர போலீஸும் கைது செய்யவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியானால் யார்தான் எனது மனைவியை துப்பாக்கி முனையில் கைது செய்தது..? அதுமட்டுமல்லாமல், கடந்த சில வருடங்களாகவே பத்மா உடல்நலம் சரியின்றி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
இதயக் கோளாறுடன் அவதிப்பட்டு வரும் அவர், மர்மமான முறையில் கைது செய்யப்பட்டிருப்பது எங்களை அச்சமடையச் செய்கிறது. கடந்த 2012-ல் என்னிடமே ஆந்திர போலீஸார் பத்மாவைப் பற்றி துருவித் துருவி விசாரித்தனர்.
இந்நிலையில், ஆந்திர மாநில மனித உரிமை ஆணையத்தில் பதியப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது இது குறித்த உண்மை வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறுகிறார்.