புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய இலங்கை பொலிஸ் திணைக்களம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
தேசிய பொலிஸ், மாகாண பொலிஸ் மற்றும் நகர பொலிஸ் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த யோசனைகள் அடங்கிய புதிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் அடங்கிய 288 பக்கங்களுடன் மூடிய வரைவு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளது.
புதிய யோசனைகளுக்கு அமைய மாகாணங்களுக்கு தனியான பொலிஸ் பிரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வடக்கு மாகாணம் உட்பட 9 மாகாணங்களுக்கு தனியான பொலிஸ் பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்பதுடன் மாகாணங்களுக்கு தனியான பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்படுவர்.
மாகாண பொலிஸாரின் அனுமதியின்றி சம்பந்தப்பட்ட மாகாணங்களில் குற்றச் செயல்களை அடக்கும் நடவடிக்கைகளில் தேசிய பொலிஸார் ஈடுபட முடியாது எனவும் கூறப்படுகிறது.
மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கவும் அரச சேவையில் மறுசீரமைப்பை மேற்கொள்ளவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் அரசாங்கம் இறுதிப்படுத்திய புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.