கொழும்பு நகரின் குப்பைகள் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் தொடர்ந்தும் கொட்டப்பட்டு வந்த நிலையில் அது பாரிய குப்பை மலையாக உருவெடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அண்மையில் குறித்த குப்பை மேடு சரிந்து பாரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியிருந்ததோடு பல உயிர்களையும் காவு கொண்டிருந்தது.
இந்த அனர்த்தத்தை தொடர்ந்து கொழும்பு நகரின் குப்பைகளை அகற்றுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகளும், விமர்சனங்களும் எழுந்தன.
குறிப்பாக கொழும்பின் பிரதான இடங்களில் வீதியில் இரு மருங்கிலும் குப்பைகள் கொட்டப்பட்டு பாரியளவில் குவிந்து காணப்பட்டன.
இந்த நிலையில் குறித்த பிரச்சினையை மூன்று மாதக்காலப்பகுதியில் தீர்த்து வைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அண்மையில் மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
அத்துடன், வீதிகளில் குப்பை கொட்டுவோருக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில் மக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியான கோட்டையிலுள்ள பல வீதிகளிலும், வீதியின் ஓரங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் நடமாடும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த குப்பை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசினால் மூன்று மாதகால அவகாசம் கோரப்பட்டுள்ள நிலையில், கொழும்பு வாழ் மக்களிடையே இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.