சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச் சர் விஜயகலா மகேஸ்வரன் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தொடர்பாக வௌியிட்ட கருத்தாலும் அதனை வாபஸ்பெற மறுத்தமையாலும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கடும் சர்ச்சை நிலைமை உருவானது.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கடற்தொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்த சட்டமூலம் மற்றும் வணிக கப்பற் தொழில் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாவதத்தில் கலந்து கொண்ட சிறுவர் விவகாரங்களுக்கான இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்ற முற்பட்டபோது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒழுங்குப்பிரச்சினைகளை எழுப்பி குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.
இதனால் தனது உரையைத் தொடரமுடியாது சுமார் ஐந்து நிமிடங்களுக்கு அதிகமாக ஆசனத்திலிருந்து எழுந்து நின்றவாறே இருந்தார். அச்சமயங்களில் தனது உரையைத் தெடர்வதற்கு அனுமதியளிக்குமாறு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கோரியவாறு இருந்தார்.
இச்சமயத்தில் சபைக்கு தலைமைதாங்கிய திலங்க சுமதிபால இராஜங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரனை பார்த்து நீங்கள் தமிழில் உரையாற்றுங்கள். சபை அமைதியாகிவடும். என்று கூறினார். இச்சமயத்தில் உரையை தொடருங்கள் என்று சுமந்திரன் எம்.பியும் சைகையால் காட்டிவிட்டு சபையை விட்டு வௌியேறினார்.
இதனையடுத்து சபைநிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததையடுத்து வடக்கு மீனவர்கள், அரசாங்கத்தின் செயற்பாடுகள், தொடர்பில் உரையாற்றிக்கொண்டிருந்தவர் இரணைதீவில் பொதுமக்களுக்குச் சொந்தமான பகுதிகளை விடுவிக்க வேண்டுமென கடந்த அரசாங்கத்திடம் கோரினேன். முன்னாள் ஜனாதிபதியும் இங்கு இருக்கின்றார்.
ஆனால் அவர் எதனையும் செய்யவில்லை எனக் கூறி அவர் மீது கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்து தனது உரையை நிறைவு செய்திருந்தார்.
இச்சமயத்தில் ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பியவாறு எழுந்த கூட்டு எதிர்க்கட்சி எம்.பியான காஞ்சன விஜயசேகர, இராஜங்க அமைச்சர் தனது குற்றச்சாட்டிற்கான ஆதரங்கள், எண்ணிக்கைகளை வௌியிட வேண்டும். இல்லையேல் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும். அல்லது அந்த விடயங்களை கன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கான பரிந்துரையை செய்கின்றேன் என்றார்.
இதனையடுத்து பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, இராஜங்க அமைச்சர்ரே நீங்கள் பதில் கூறுங்கள் என்றார்
ஆச்சமயத்தில் எழுந்த இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், உங்களுக்கு பதில் கூறவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்கள் உண்மைகளை அறிந்துள்ளார்கள். எங்களையும் மக்களே ஆணை வழங்கி அனுப்பி வைத்துள்ளார்கள் என்று கூறிவிட்டு கருத்தை வாபஸ்பெற முடியாது எனக் கூறி அமர்ந்து விட்டார்.
இதனையடுத்து இராஜங்க அமைச்சரின் கருத்துக்களை மொழிபெயர்த்து சிங்கள மொழியில் கூறுங்கள் என கூறியனார் காஞ்சன எம்.பி. அவர் பதிலளிக்காத நிலையில் அக்கருத்துக்களை கன்சாட்டிலிருந்து நீக்குங்கள் என்று கோரினார்.
அதற்கமைய அக்கருத்துகள் கன்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக பிரதிசாபாநாயகர் திலங்க சுமாதிபால அறிவித்தார்.