பொலிஸ் அலுவலகர் ஒருவரின் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கைக்கடிகாரத்தைத் திருடினார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் இன்று முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது:
“ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி, நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்துள்ளார்.
அவர் மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் முன்னிலையாகவே வருகை தந்துள்ளார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிறுகுற்றப்பிரிவு பொலிஸ் அலுவலரின் கைக்கடிகாரத்தை நேற்றுமுன்தினம் காலையிலிருந்து காணவில்லை. அதனால் பொலிஸ் அதிகாரியின் அலைபேசிக்கு அழைப்பெடுத்த பொலிஸ் அலுவலகர், தனது கடிகாரம் பற்றி கேட்டபோது, தான் அதனைக் காணவில்லை என்றும் அதைப்பற்றி தனக்கு தெரியாது என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
இருந்தும் சந்தேகம் கொண்ட பொலிஸ் அலுவலகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தனது கைப்பையை வைத்துவிட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றுக்குச் சென்ற பின்னர், பொலிஸ் அதிகாரியின் கைப்பையைப் பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அதற்குள் அந்தக் கைக்கடிகாரம் இருந்துள்ளது.
இருந்தும், அந்தப் பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் இருந்து மாலை பொலிஸ் நிலையத்துக்குத் திரும்பிய பின்னர் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரியின் முன்னிலையில் வைத்து பொலிஸ் அலுவலகர், தனது கைக்கடிகாரம் வெளிநாட்டிலுள்ள உறவினர் ஒருவர் அன்பளிக்காக வழங்கியதாகவும், அந்தக் கைக்கடிகாரத்தை கண்டதா? என பொலிஸ் அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
“நான் எடுக்கவில்லை. வேண்டும் என்றால் எனது கைப்பையைப் பரிசோதனை செய்து பாருங்கள். இருந்தால் எனக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்” என்று பொறுப்பதிகாரியின் முன்னிலையில் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
தலைமைப் பொலிஸ் அதிகாரிக்கு முன்பாக மீண்டும் அந்தப் பொலிஸ் அதிகாரியின் கைப்பையைப் பார்த்த போது, அதற்குள் கைக்கடிகாரம் இருந்துள்ளது. உடனடியாக பொலிஸ் அலுவலகர் அந்தப் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று வியாழக்கிழமை பொலிஸ் அதிகாரி யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவார் – என்றனர்.