ஒரே குடும்பத்தில் 8 மாதங்களில் 7 பேர் தொடர் மரணம் : ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஒரே குடும்பத்தில் 8 மாதங்களில் 7 பேர் தொடர் மரணம் : ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கடந்த எட்டு மாதங்களில் இறந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டரையைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சரண் அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டநிலையில் மூன்று நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நலம் தேறிய பின் வீடுதிரும்பிய நிலையில் திடீர் வயிற்று வலியால் உயிரிழந்தான்.
இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களில் சரண் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
முதலில் கிறிஸ்டோபர் என்ற 13 வயது சிறுவன் கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இறந்திருக்கிறான். பின்னர், அந்த மாத இறுதிக்குள் 6 வயது இளைஞன் நெல்சன,; 7 வயது சிறுமி கிருத்திகா மெர்லின், 23 வயது இளைஞன் வினோத்குமார், 85 வயதுடைய ஜோசப், 65 வயதுடைய கிறிஸ்டா என அடுத்தடுத்து ஐந்து பேர் இறந்தனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி இறந்த கிறிஸ்டா என்பவர் சரண் மற்றும் மெர்லின் ஆகியோரின் பாட்டி.
அவரது இறப்புக்குப் பின் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றில் எலியைக் கொல்ல வைக்கப்படும் மருந்து இருந்தது தெரியவந்தது.
இதனால், அதற்கு முன்னர் நடந்த அடுத்தடுத்த மரணங்களின் மீது சந்தேகம் உருவானது. இச்சூழலில் சரண் மருத்துவமனையில் இறந்திருப்பது மர்மத்தை பூதாகரமாக்கியுள்ளது.
கிறிஸ்டோபர் முதல் சரண் வரை இறந்த அனைவருக்கும் இறப்பதற்கு முன் வயிற்றுக்கோளாறு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சரண் இறப்பு பற்றி தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் வந்து பார்த்துவிட்டு காவல்துறையினரின் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.காவல்துறையினர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் விவரம் பெற்ற விசாரணையைத் தொடங்க முயன்றுள்ளனர்.
சிலர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் தொடர் மரணங்களுக்குப் பின்னால் குடும்பப் பிரச்சனையால் ஏற்பட்ட முன் விரோதம் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

About UK TAMIL NEWS