தாயின் மரணத்திற்கு நீதி வேண்டி ஐந்து வயது சிறுமி களமிறங்கியுள்ளதுடன், இதற்காக தான் உண்டியலில் சேர்த்து வந்த பணத்தை பொலிஸாருக்கு கொடுத்து உதவி கோரியுள்ளார்.
குறித்த சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட சீமா மற்றும் சஞ்சீவ் கொளசிக் இருவருக்கும் பிறந்த மாநவியே இந்த செயலை செய்துள்ளார்.
இருப்பினும் சீமா திருமணமாகி ஒரு வருடத்திலேயே கணவனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். வரதட்சணை கொடுமை காரணமாகவே அவர் இவ்வாறு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிந்து சென்ற சீமா கணவனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த போதும் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
இந்த சம்பவத்தில் மனமுடைந்த சீமா அண்மையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையிலேயே அவரது மகளான மாநவி தனது தாத்தா மற்றும் மாமாவுடன் தான் உண்டியலில் சேர்த்து வந்த பணத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
பொலிஸ் நிலையத்தில் மாநவி, தனது தாயை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளதுடன், அதற்காக தனது உண்டியலிலுள்ள பணத்தை வைத்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
இதன்போது சிறுமியிடம் பேசிய பொலிஸ் உத்தியோகத்தர் எதற்காக பணம் கொண்டு வந்தாய் என சிறுமியிடம் வினவ, பணம் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது என அனைவரும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுமி தெரிவிக்கையில், அதனால் தான் நான் எனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து வந்தேன். எனது தாயின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு, உனது உண்டியல் பணத்தை நீயே எடுத்துச் செல். உனது தாயின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியைச் சேரந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.