இப்படியான கொடூர கொலையை இதுவரை நான் கண்டதில்லை –வித்தியா வழக்கின் 21 ஆவது சாட்சி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இப்படியான கொடூர கொலையை இதுவரை நான் கண்டதில்லை –வித்தியா வழக்கின் 21 ஆவது சாட்சி

நான் சடலத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதற்கு முதல் நான் இவ்வாறு ஒரு கொடூர கொலையை கண்டதில்லை என வித்தியா கொலை வழக்கின் 21ஆவது சாட்சியமான உப பொலிஸ் பரிசோதகர் இரான் நீதாய ட்ரயல் அட்பார் மன்றின் முன்பாக முன்பாக சாட்சியமளித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணையின் இரண்டாம் கட்ட சாட்சி பதிவுகள் நேற்றையதினம்; செவ்வாய்கிழமை ஆரம்பமானது.
யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் ட்ரயல் அட்பார் மன்றில் நடைபெற்றது.
பிரதி சொலிஸ்டர் ஜெனரல் வழக்கை நெறிப்படுத்தினார்.
நேற்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், லக்சி டீ சில்வா மற்றும் சட்டத்தரணி மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
அதையடுத்து குறித்த வழக்கின் 21ஆவது சாட்சியான உப பொலிஸ் பரிசோதகர் மரகல இரான் சாட்சியமளிக்கையில்
நான் தற்போது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகிறேன். சம்பவம் நடைபெற்ற கால பகுதியில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தேன்.
அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்தேன்.
அந்நிலையில் 2015 மே மாதம் 14ஆம் திகதி காலை நான் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த போது , தகவல் கிடைத்தது புங்குடுதீவு ஆலடி சந்திக்கு அருகில் மக்கள் கூட்டமாக இருப்பதாக அதனை அடுந்த அந்த பகுதிக்கு நான் எனது பொலிஸ் குழுவுடன் அந்த இடத்திற்கு சென்று இருந்தேன்.
ஆலடி சந்தியில் இருந்து சிறிது தூரம் உள்ளே சென்றால் , பற்றைகாடுகளுக்கு மத்தியில் பாழடைந்த கட்டடங்கள் உள்ள பகுதியில் மக்கள் கூட்டமாக இருந்தது.
அந்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் காணப்பட்டது. நான் நின்ற இடத்தில் இருந்து சுமார் 15 மீற்றர் தூரத்தில் சடலம் காணப்பட்டது என தெரிவித்து சடலம் காணப்பட்ட நிலையை மன்றில் விபரித்து கூறினார்.
அவ்வேளை எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்த, குறித்த பொலிஸ் சாட்சி , தகவல் புத்தகத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல் தனது வாக்கு மூலத்தை பார்த்து சாட்சியம் அளிக்கின்றார். அதனை அனுமதிக்க கூடாது என மன்றில் கோரினார்.
அதனை அடுத்து மன்று , சாட்சியத்திடம் , வாக்கு மூலத்தை பார்த்து சாட்சியம் அளிக்காமல் , தகவல் புத்தகத்தை பார்த்து சாட்சியம் அளிக்குமாறு அறிவுறுத்தியது.
அதனை தொடர்ந்து சாட்சியம் அளிப்பவர் , தொடர்ந்து தனது சாட்சியத்தை அளித்தார். அதன் போது,நாம் அன்றைய தினம் சடலத்தினை ஹபிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி விட்டு , எமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா (அப்போதைய ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம் அன்றைய தினம் (14ஆம் திகதி) இரவு 10 மணியளவில் பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் பூபாலசிங்கம் தவக்குமார் ஆகிய மூவரையும் அவர்களது வீட்டுகளுக்கு அருகில் வைத்து கைது செய்தோம்.
மறுநாள் (15ஆம் திகதி ) மாணவியின் இறுதி சடங்கு இடம்பெற்றது. அன்றைய தினம் காலை முதல் இறுதி சடங்கு முடிவடைந்து சடலம் நல்லடக்கம் செய்யப்படும் வரையில் , நான் மாணவி கல்வி கற்ற பாடசாலைக்கு அருகில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருந்தேன்.
அதன் பின்னர் 17ஆம் திகதி மாலை எமது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குயிண்டஸ் குணால் பெரேரா எம்மை புங்குடுதீவில் உள்ள நாதன் கடைக்கு முன்பாக வருமாறு அழைத்து இருந்தார். அதனை அடுத்து நாம் அந்த இடத்திற்கு சென்று இருந்தோம்.
அந்த கடையில் இருந்து சுமார் 400 மீற்றர் தூரத்திற்கு அப்பால் உள்ள இடத்திற்கு வர சொன்னார். நாம் அங்கு சென்ற போது மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐந்து சந்தேக நபர்களையும் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்தோம்.
அவர்களை கைது செய்த போது அவர்களில் ஒரு சிலர் ஆலயத்திற்கு செல்வதற்கு தயாரான நிலையில் வேட்டியுடன் மேலங்கி இல்லாமல் நின்று இருந்தார்கள். அவர்கள் ஐவரையும் ஒரே இடத்தில் வைத்தே கைது செய்தோம்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எமது பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லவில்லை ஏனெனில் சந்தேக நபர்களில் ஒருவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவதனால் நாம் அவர்களை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லாது குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு விசாரணைக்காக கொண்டு சென்றோம்.
நாம் அவர்களை குறிகட்டுவான் போலிஸ் காவலரணுக்கு கொண்டு சென்று வாக்கு மூலங்களை பெற முயற்சிக்கும் போது , ஊரவர்கள் ஒன்று திரண்டு ,சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி காவலரணை தாக்கினார்கள்.
அதனால் எமது பொறுப்பதிகாரி மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு அதனை கொண்டு சென்று கடற்படையின் உதவியுடன் சந்தேக நபர்களை கடல் வழியாக நீருந்து விசை படகு (வோட்டர் ஜெட்) மூலம் காரைநகர் கடற்படை தளத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து வட்டுக்கோட்டை பொலிசாரின் உதவியுடன் சந்தேக நபர்களை யாழ்ப்பான தலைமை போலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தோம்.
அன்றைய தினம் இரவு சந்தேக நபர்கள் வாக்கு மூலம் அளிக்கும் நிலைமையில் இல்லாத காரணத்தால் அவர்கள் ஓய்வெடுக்க விட்டு விட்டு நாம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிவிட்டோம்.
பின்னர் மறுநாள் 18ஆம் திகதி அதிகாலை மீண்டும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் சென்று சந்தேக நபர்களின் வாக்கு மூலங்களை கோபி எனும் தமிழ் போலிஸ் உத்தியோகஸ்தரின் உதவியுடன் பெற்றுக்கொண்டு இருந்த வேளை , வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க என்னை தனது அலுவலகத்திற்கு வந்து சந்திக்குமாறு அழைத்தார்.
அதனை அடுத்து நான் அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அவ்வேளை அங்கு யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபர் பெரேரா , யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசேகர , யாழ்ப்பாண போலிஸ் நிலையத்தில் அப்போது கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் மற்றும் ஒருவர் சிவில் உடையில் இருந்தார்.
அப்போது சிவில் உடையில் இருந்தவர் யார் என்று தெரியாது பின்னர் அவர் சட்டத்துறை பீடாதிபதி தமிழ்மாறன் என அறிந்து கொண்டேன்.
அப்போது வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் என்னிடம் மாணவி கொலை வழக்கில் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் பற்றியும் என்னிடம் விசாரித்தார்.
பின்னர் , இந்த வழக்குடன் தொடர்புடைய நபர் ஒருவர் உள்ளார் எனவும் அவர் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முற்படலாம் அதானல் சர்வதேச விமான நிலைய போலீசாருக்கு தகவல் வழங்கி அவர் வெளிநாடு தப்பி செல்லவதனை தடுக்குமாறு சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரது கடவுசீட்டு இலக்கத்தை கூறி அந்த தகவல்களை சர்வதேச விமான நிலைய போலீசாருக்கு தகவல் வழங்குமாறு கூறினார். நான் அதனை எமது போலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கூறினேன்.
அதன் பின்னர் நான் மீண்டும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வந்து அங்கு தடுத்து வைக்கபப்ட்டு இருந்த ஐந்து சந்தேக நபர்களிடமும் வாக்கு மூலத்தினை பெற்று , அவர்களை யாழ்.போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் , அவர்களை அப்போதைய ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முற்படுத்தினோம்.
அங்கு நீதிவானிடம் ஐந்து சந்தேக நபர்களையும் 48 மணி நேர போலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரினோம். அதற்கு நீதிவான் அனுமதியளித்து இருந்தார்.
ஒன்பதாவது சந்தேக நபரான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் தொடர்பில் எமக்கு எந்த தகவலும் தெரியாது 18 ஆம் திகதி யாழ்ப்பாண போலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து முறைப்பாடு பதிவு செய்த பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பின்னர் மறுநாள் 19 ஆம் திகதி வெள்ளவத்தையில் வைத்து , மீள கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் அறிந்து கொண்டேன். என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன குறுக்கு விசாரணை செய்யும் போது ,
கேள்வி :- சடலத்திற்கு அருகில் துவிச்ச்கர வண்டி எதனையும் கண்டீரா?
பதில் :- ஆம். பெண்கள் துவிச்சக்கர வண்டி ஒன்றினை கண்டேன்.
கேள்வி :- சடலத்திற்கும் துவிச்சக்கர வண்டிக்கும் இடையில் எவ்வளவு தூரம் இருந்தது?
பதில் :- நான் சடலத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதற்கு முதல் நான் இவ்வாறு ஒரு கொடூர கொலையை கண்டதில்லை.
அதனால் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தமையால் சடலத்திற்கும் சைக்கிளுக்கும் இடையிலான தூரம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.
அதனை தொடர்ந்து , எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்த , என்னுடைய கட்சி கார்கள் பொலிசாருக்கு முதல் அளித்த வாக்கு மூலத்திற்கும் பின்னர் குற்ற புலனாய்வு துறையினருக்கு அளித்த வாக்கு மூலத்திற்கும் இடையில் வேறுபாடு உள்ளது.
போலீசாருக்கு முதல் அளித்த வாக்கு மூலம் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம். அது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கவோ முரண்பாட்டை முன் வைக்கவோ எனக்கு தனியுரிமை உண்டு என மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதற்கு மறுமொழி அளித்த பிரதி சொலிஸ்டர் ஜெனரல் , இது சட்ட முரணான விண்ணப்பம். என தெரிவித்து அந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு மன்றில் கோரினார்.
அதனை அடுத்து மன்று , எதிரிகளால் போலீசாருக்கு வழங்கப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழக்கில் சான்றாக அணைக்க முடியாது. என சட்டம் சொல்கின்றது.
அவ்வாறு கொடுக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் தொடர்பில் கேள்வி எழுப்ப முடியாது. என்பதனால் எதிரி தரப்பு சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை மன்று ஏக மனதாக மன்று நிராகரித்தது.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்த மீண்டும் தனது குறுக்கு விசாரணைகளை முன்னேடுத்தார்.
கேள்வி :- சந்தேக நபர்களிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஏதேனும் சான்று பொருட்களை கைப்பற்றி நீர்களா ?
பதில் :- வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொல்லப்பட்ட மாணவியின் மூக்கு கண்ணாடியினை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதை மீட்க முடியவில்லை.
கேள்வி :- ஏன் ?
பதில் :- அன்றைய தினம் (18ஆம் திகதி ) யுத்த வெற்றி நாள் அதனால் மக்கள் கூடுவார்கள் அன்று சந்தேக நபர்களை புங்குடுதீவுக்கு அழைத்து செல்வது.
நல்லதில்லை என மேல் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். அதனால் அன்று அழைத்து செல்லவில்லை மறுநாள் நாம் விசாரித்ததில் புங்குடுதீவில் யுத்த வெற்றி நாளுக்காக எவரும் கூடவில்லை என அறிந்து கொண்டோம்.
அதன் பின்னர் மூக்கு கண்ணாடி உள்ளிட்ட சான்று பொருட்களை மீட்க முயற்சித்த வேளை சந்தேக நபர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு அந்த பகுதிகளில் அசாதரண சூழ் நிலை காணப்பட்டமையால் , நாம் சந்தேக நபர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் முகமாக அந்த பகுதிக்கு செல்லவில்லை.
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , எதிரிகளை அடித்து துன்புறுத்தி சித்திரவதை புரிந்தே அவர்களின் வாக்கு மூலங்களை பெற்று உள்ளீர்கள் என நான் எதிரிகள் சார்பில் சொல்கிறேன் என தெரிவித்தார்.
அதனை தான் முற்றாக மறுப்பதாக சாட்சியமளித்தவர் தெரிவித்தார்.எதிரிகளின் உடலில் காயங்கள் இல்லை. அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சாட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி குறுக்கு விசாரணை செய்யும் போது,
கேள்வி :- எதிரிகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திநீர்கள் தானே ?
பதில் :- ஆம்.
கேள்வி :- அதில் எதிரிகளின் உடலில் கீறல் காயங்களோ , வேறு காயங்களோ இருந்தாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்ததா ?
பதில் :- இல்லை. அவ்வாறு எந்த காயங்களும் சந்தேக நபர்களின் உடலில் இல்லை.
எதிரிகளை சித்திரவதை புரியவில்லை. அதனை அடுத்து எதிரிகள் தரப்பு சட்டத்தரணி சின்னையா கேதீஸ்வரன் குறுக்கு விசாரணை செய்யும் போது ,
4 ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளை தலைகீழாக கட்டி தூக்கி பொல்லால் அடித்து துன்புறுத்தி வாக்கு மூலம் பெற்றீர் என கூறுகிறேன் என தெரிவித்தார், அதற்கு சாட்சியளிப்பவர் இல்லை. அதனை நான் முற்றாக மறுக்கிறேன் என பதிலளித்தார்.
9ஆவது சந்தேக நபர் தொடர்பில் உம்மிடம் எந்த சாட்சி ஆதாரமும் இல்லை என கூறுகிறேன். ஆம் என்னிடம் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என சாட்சியமளித்தார் பதிலளித்தார்.
09ஆவது சந்தேக நபர் தொடர்பில் எந்த சாட்சி ஆதாரமும் இல்லாதமையால் தான் அவர் யாழ்ப்பாண பொலிசாரால் விடுவிக்கப்பட்டார் என கூறுகிறேன். அது தொடர்பில் எனக்கு தெரியாது என சாட்சியமளித்தவர் பதிலளித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டு , சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த பொலிஸ் சாட்சியம் மன்றில் சுமார் 6 மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS