குஜராத்தைச் சேர்ந்த மங்குபின் மக்வானாவுக்கு கடந்த வியாழக்கிழமை மறக்க முடியாத நாளாக இருந்திருக்கிறது. காரணம், 12 சிங்கங்கள் புடை சூழ ஆம்புலன்ஸில் குழந்தையை மங்குபின் பிரசவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அவசர மேலாண்மை நிர்வாகி சேதன் காதே கூறும்போது, "குஜாராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் லுனாசாபூர் கிராமத்தைச் சேர்ந்த மங்குபினுக்கு வியாழக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அருகேவுள்ள அரசு மருத்துவமனையில் மங்குபினை அனுமதிக்க ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.
ஆம்புலன்ஸ் கிர் காடுகள் வனப்பகுதி வழியாக செல்லும்போது அந்த வழியில் வந்த 12 சிங்கங்கள் ஆம்புலன்ஸை சூழ்ந்து கொண்டன.
மேலும் சிங்கங்கள் ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சாலையை மறித்துள்ளன. இதனால் ஆம்புலன்ஸில் இருந்த ஓட்டுனர் மற்றும் ஊழியர்கள் பதற்றம் அடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் மங்குபினுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சூழ்நிலையை புரிந்து கொண்ட ஊழியர்கள் மருத்துவருக்கு இதுகுறித்து தெரிவித்து மருத்துவரின் ஆலோசனைப் படி பிரசவம் பார்த்துள்ளனர்.
இதில் மங்குபினுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாதவ் சிங்கங்களின் அடுத்த நகர்வை உன்னிப்பாக நோட்டமிட்டிருக்கிறார்.
ஆம்புலன்ஸை அங்கிருந்து மெதுவாக ஓட்டிய ஜாதவ் ஆம்புலன்ஸ் முன் இருந்த விளக்குகளை எறிய விட்டுள்ளார். அதன் பின் சிங்கங்கள் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டுள்ளன.
தாயும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.