11 தமிழ் இளைஞர்களும் பணத்துக்காகவே கடத்தல்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

11 தமிழ் இளைஞர்களும் பணத்துக்காகவே கடத்தல்!

கொழும்பு மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் பணத்துக்காகவே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது-
இந்தச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக 2009ஆம் ஆண்டு குற்றத்தடுப்பு பிரிவுக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது.
அந்த முறைப்பாட்டில் சம்பத் முனசிங்க தங்கியிருந்த இடத்தில் இருந்து அடையாள அட்டைகள், கடவுச் சீட்டு, வெடிபொருள்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பத் முனசிங்க தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டது.
திருகோணமலையைச் சேர்ந்த தியாகராஜா ஜெகன், கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த கஸ்தூரி ஆராச்சிகே எண்டனி, மன்னாரை சேர்ந்த சூசைப்பிள்ளை அமலன் லியோன் மற்றும் அவரது மகன் சூசைப்பிள்ளை ரொஷான் லியோன் ஆகியோரின் அடையாள அட்டைகளே மீட்கப்பட்டன என்று தெரியவந்தது.
அத்துடன் தெஹிவளை பகுதியில் வைத்து 5 பேர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் லெப்டினன்ட் ஜெனரல் சம்பத் ஹெட்டியாராச்சிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.
கடத்தப்பட்டவர்கள், கடற்படையின் தொலைபேசிகள் ஊடாக தமது உறவினர்களுக்கு பேசியமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க இரண்டு குழுக்களை கொண்டு நடத்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவை சந்தித்து பேசியமையும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த இளைஞர்கள் பணத்துக்காகவே கடத்தப்பட்டுள்ளனர். அதற்காக வலுவான ஆதாரங்கள் குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைகளின் மூலம் கிடைத்துள்ளன.- என்றார்.

About UK TAMIL NEWS