நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார்.
அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, “நான் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்பவர்களை என் அருகில் வைத்துக் கொள்ள மாட்டேன். போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு தனியாக ஒருநாள் சென்னை ரசிகர்களையும் சந்தித்து பேசினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை குறி வைத்து ரஜினி ரகசியமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி சில முக்கிய பிரமுகர்களை ரகசியமாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது.
தனது நண்பர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுடனும் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ரஜினியை ஏற்கனவே தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். நேற்று தென்னக நதிகள் இணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார். அப்போது நதிகள் இணைப்புக்கு பிரதமரிடம் ரூ.1 கோடி கொடுத்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டார். விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாக ரஜினி உறுதி அளித்தார்.
ரஜினி அரசியலுக்கு வர ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது. அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து ரஜினிக்கு உயர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு நடிகர் ரஜினிகாந்தை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன்சம்பத், பொதுச்செயலாளர் ராம ரவிக்குமார், இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள்.
கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ரஜினி அவர்களின் கோரிக்கைகளை புன்முறுவலுடன் சிரித்தபடி ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. சுமார் 45 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
பின்னர் வெளியே வந்த அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினி மக்கள் சேவை செய்வதற்காக நிச்சயம் அரசியலுக்கு வருவார். அரசியலுக்கு வருவதற்கு அவர் முழுமையாக தயாராகி விட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினியே வெளியிடுவார். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு நாங்கள் துணை நிற்போம்.
அரசியலில் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றத்தை ரஜினியால் ஏற்படுத்த முடியும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் ரஜினி தமிழக மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.
1996-ம் ஆண்டு ‘ஆண்டவனே வந்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது’ என்று குரல் கொடுத்து புதிய கூட்டணி உருவாகி ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுத்தார். தேவையான போதெல்லாம் தமிழக மக்களுக்காக ரஜினி குரல் கொடுத்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வர வேண்டிய தருணம் வந்து விட்டது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவார். அப்படி வந்தால்தான் அவரால் மக்களுக்கு நன்மை செய்ய முடியும். தேசிய நதிகள் பற்றி வற்புறுத்துவதற்காக ரஜினிக்கு எம்.பி.க்கள் ஆதரவு தேவை. அவர் அரசியல் கட்சி தொடங்கினால் அவரது கட்சி சார்பில் புதிய எம்.பி.க்கள் உருவாகுவார்கள்.
டிசம்பர் 12-ந்தேதி அவரது பிறந்த நாள் அன்று ரஜினி அரசியல் பிரவேசத்தை தொடங்குவதாகவும் தகவல் பரவி வருகிறது. இதுபற்றி நாங்கள் அவரிடம் கேட்டபோது, “அரசியலுக்கு வருவது பற்றி யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ரஜினி கூறினார்.
நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம். தனிக்கட்சி தொடங்கி அவர் சிங்கிளாக சிங்கமாக வருவார். ரஜினியை பா.ஜனதா இயக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.