விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று எந்த அடிப்படையில் கூறினீர்கள்?
பதில் :- ஜெயலலிதா அம்மையார் காலமான பின்னர் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.வில் முதல்வர் பதவிக்கான வெற்றிடத்தை அவர்கள் நிரப்பி கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா என்கிற ஆளுமை தமிழக அரசியலில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை அ.தி.மு.க.வினரால் நிரப்ப முடியவில்லை. அதனால் பலரும் அந்த இடத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ஒரு விவாதம் நடைபெறுகிறது. ஒரு வேளை அவர் அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியலில் சற்றே தாக்கம் ஏற்படுமா? என்று அப்படிப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நான் பதில் அளித்தேன்.
அப்போது, ரஜினிகாந்த் திரைப்பட கதாநாயகர் என்னும் வகையில் அவருக்கென தமிழக மக்கள் இடையே ஒரு செல்வாக்கு உள்ளது அதனை பயன்படுத்தி தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அவர் நிரப்பக்கூடும் என்றும் கூறினேன்.
அவர் அரசியலுக்கு வருவார் என்றும் வெற்றிடத்தை நிரப்புவார் என்றும் நான் அறுதியிட்டு கூறவில்லை. தமிழ்நாட்டு மக்களின் உளவியல் திரைப்பட கவர்ச்சியை அடிப்படையாக கொண்டே அரசியலை தீர்மானிக்கும் நிலை உள்ளது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.
கேள்வி:- தமிழுக்காக, தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நீங்கள் திடீரென தமிழர் அல்லாத நடிகர் ரஜினிகாந்த்தை வரவேற்கிறேன் என்ற குற்றச்சாட்டுள்ளதோ.
பதில்:- ரஜினிகாந்த் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கதாநாயகராக விளங்குகிறார். அவரை கதாநாயகர் என்கிற வகையில் சூப்பர் ஸ்டாராக ஏற்று இருக்கிறார்கள். ஏறத்தாழ 45 ஆண்டுகளாக தமிழகத்தில் குறிப்பாக திரைப்பட உலகத்தின் மூலம் ஆளுமை செலுத்தி வருகிறார். அத்துடன் அவரும் இந்த தேசத்தின் ஒரு குடிமகன். அரசியலில் ஈடுபட யாருக்கும் உரிமை உள்ளது.
யாரையும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று தடுப்பது ஜனநாயக பண்பாகாது. ஆகவே அவர் வந்தால் வரட்டும் என்று கூறுகிறேன். அவ்வளவுதான்.
அவர் தமிழர் அல்லாதவர் என்பதையும் அவரை முதல்வராக்க கூடாது என்பதையும் அவர் அரசியலுக்கு வந்த பின்னர் மக்களிடம் சொல்ல நமக்கு உரிமை இருக்கிறது. தமிழர் அல்லாதவர்கள் அரசியலுக்கு வரவே கூடாது என்பது அரசியல் நாகரீகமல்ல.
கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் உங்களால் சேர முடியாது என்பதால்தான் நீங்கள் வலிந்து ரஜினியை வரவேற்பதாக கூறுகிறார்களே?
பதில்:- இது அரசியல் காழ்வுணர்வின் வெளிப்பாடாகும். தி.மு.க.வோடு எங்களுக்கு எந்த பிரச்சினையும்இல்லை. கலைஞரின் வைர விழா நிகழ்ச்சியில் என்னை அழைக்கவில்லை என்பதால் நான் இவ்வாறு பேசுவதாக சிலர் காரணத்தை வைத்து கொள்கிறார்கள். வேண்டும் என்றே தி.மு.க.வுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு விரிசலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு வதந்திகளை பரப்புகின்றனர்.
கேள்வி:- கலைஞரை போல மு.க.ஸ்டாலின் ஒரு வசீகரமான தலைவர் இல்லை என்று நீங்கள் கூறியது ஏன்?
பதில்:- தமிழக அரசியலில் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்க கூடிய வசீகரத்தை பெற்று இருந்தார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அது போன்ற ஒரு வசீகரம் இன்றைய நிலையில் தமிழக அரசியலில் யாருக்கும் இல்லை.
ஒரு குறிப்பிட்ட பகுதியினரை மட்டும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஒவ்வொரு தலைமைக்கும் உண்டு. ஆனால் அனைத்து தரப்பினரையும் கவரும் ஆற்றல்தான் வசீகர தலைமைக்கான அடையாளமாகும். எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் அவர்களின் தனித்திறமைகளை தாண்டி சினிமா கவர்ச்சி இருந்தது. அண்ணாவிற்கும் கலைஞருக்கும் அவர்களின் சினிமா கவர்ச்சிகளையும் தாண்டி கூடுதலான தனித்திறமைகள் இருந்தன.
இதனை நான் ஸ்டாலினோடு ஒப்பிட்டு சொன்னதால் அவரை குறைத்து மதிப்பிட்டதாக பொருள் ஆகாது. அவரும் இன்றைக்கு தி.மு.க.வை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு வலிமை வாய்ந்த எதிர்க்கட்சியாக வலிமைப்படுத்தி அதனை வெற்றிகரமாக வழி நடத்தி கொண்டிருக்கிறார்.
ஆனாலும் அவருக்கு இந்த 4 பேருக்கும் இருந்த சினிமா கவர்ச்சி அல்லது சினிமா மூலமான ஆதரவு இல்லை என்பது உண்மையாகும். இதை சுட்டிகாட்டியதால் அவருக்கு எதிராக நான் சொன்னதாக சிலர் வேண்டும் என்றே திரித்து பேசுகின்றனர்.
கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி அமைப்பதற்கு இது அச்சாரமா?
பதில்:- அவர் இன்னும் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தனது ரசிகர்களை போருக்கு தயாராகுங்கள் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறார். ஆண்டவன் என்னை இதுவரை ஒரு நடிகனாக ஆட்டி வைக்கிறார். இனிமேல் என்னை எப்படி வழி நடத்துவார் என்று எனக்கு தெரியாது என சொல்லி இருக்கிறார்.
ரஜினியின் இந்த பேச்சை வைத்துக் கொண்டு சிலர் ஏன் அலறுகின்றனர் என்று தெரியவில்லை. அவர் அரசியலுக்கு வருவது பற்றி எந்த கவலையும் இல்லை. அச்சமும் இல்லை. சினிமா கவர்ச்சிக்கு தமிழக மக்கள் முக்கியத்துவம் தருவதால் ரஜினியையும் இவர்கள் தூக்கி கொண்டாடுவார்கள் என்று மட்டும்தான் கருத்து சொல்லி இருக்கிறேன்.
அவரும் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் அரசியலுக்கு வந்தால் வரட்டும். அவரை களத்தில் சந்திப்போம் என்கிற வகையில் எனது கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.