சில சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பௌத்த பிக்குமாருக்கு அவதூறு ஏற்படும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களுத்துறை போதி வளாகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமரபுர பௌத்த பீடத்தின் வைபவம் ஒன்றில் பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் மூலமாக நாட்டின் கௌரவமிக்க பௌத்த மதத் தலைவர்கள் அவதூறுக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க போவதில்லை.
இது குறித்து கவலையை தெரிவித்து கொள்வதுடன், இது தற்போதைய சமூகத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவு என தான் கருதுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நலனுக்காவுமே நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர சமூக சீர்குலைவுக்கோ அல்லது நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தவோ அதனை பயன்படுத்தக் கூடாது.
அதேபோல் இனங்களுக்கு இடையில் சமாதானம், நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி, சகல இனங்களும் சகோதரத்துவதுடன் வாழும் அமைதியான சமூகத்தை உருவாக்க பௌத்த மத தலைவர்கள் உட்பட மத தலைவர்கள் அனைவரும் முன்னிலை வகிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.