சுவிஸில் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடைபெறவிருந்த வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சுவிஸில் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடைபெறவிருந்த வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது!

சுவிஸில் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக நடைபெறவிருந்த வழக்கு விசாரணை பிற்போடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டாலும் கையெழுத்து இயக்கம் தொடரும்.
கையெழுத்தியக்கத்தில் இணைந்து தேசப்பணியார்களுக்கு ஆதரவு வழங்குவோம்!
சுவிஸில் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக சுவிஸ் Belinzona குற்றவியல் நீதிமன்றத்தில் 06.06.2018 அன்று நடைபெறவிருந்து பிற்போடப்பட்ட வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் 08.01.2018 ம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட எமது தேசப்பணியாளர்கள் சார்பாக வாதாடும் சுவிஸ் நாட்டின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களின் வழிகாட்டுதலோடு சுவிஸ் தமிழர் அவையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்தியக்கம் முனைப்போடு செயற்படுத்தப்பட்டு வருகிறது. இக் கையெழுத்தியக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைத்து சுவிஸ்வாழ் தமிழ் மக்களையும் சுவிஸ் தமிழர் அவை வேண்டிக்கொள்கிறது.
இவ்வாறு சுவிஸ் தமிழர் அவை விடுத்த ஊடக அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எமது தாயகத்தில் இன அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதிகளிலிருந்து 2009 முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்பு வரை புலம்பெயர் தமிழ் மக்கள் ஆற்றிய பங்களிப்பானது அளப்பரியது. அதில் தேசிய உணர்வோடு சுவிஸ்வாழ் தமிழ் மக்களும் எமது மண்ணின் விடுதலைக்காகவும் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகவும் ஆற்றிய பணி மகத்தானது.
பொருளாதாரத் தடையின்போது போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக வதிவிடங்களில் வாழ்ந்த மக்களுக்கான இருப்பிடம், மருத்துவம், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத்தேவைகளுக்காகவும் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடாக கணிசமான நிதிப் பங்களிப்பினை உணர்வுரீதியான மனவிருப்புடன் தாமாகவே முன்வந்து வழங்கியிருந்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
இருந்தும் தேசம் நோக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்ட உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் சிலர் மீது தேசம் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம்வரை இவர்கள் தேசம் நோக்கி ஆற்றிய பணிகள் குறித்து சுவிஸ் சட்டத்துக்கு முரணான வகையில் வற்புறுத்தி தமிழ் மக்களிடம் பணம் சேகரித்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிஸ் தமிழர் அவை இக் குற்றச்சாட்டினை நிராகரிக்கிறது. இதனை ஆட்சேபித்து சுவிஸ்வாழ் தமிழ் மக்களின் கருத்துக்களை பெறும் வகையில் “தேசத்துக்காய் உழைத்தோருக்கு உறுதுணையாய் நாமிருப்போம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை சுவிஸ் தமிழர் அவை முன்னெடுத்து வருகின்றது. மக்கள் தமது சுய விருப்பத்தின் பேரில் தாமாக முன்வந்தே உதவிகளை வழங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் தமது கருத்துக்களை பதிவிட்டு வருவதோடு இவ்வாறான மனிதநேய செயற்பாட்டுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
சுவிஸ் அரச நீதித்துறை உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் சிலர் மீது குற்றம் சுமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்து 06.06.2017 முதல் 28.07.2017 வரை விசாரணைகள் நடைபெறும் என முன்னர் அறிவித்திருந்தது. பின்னர் பிற்போடப்பட்ட வழக்கு விசாரணைகள் தற்போது எதிர்வரும் 08.01.2018 ம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கு குற்றவியல் வழக்காக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இது முழுமையான அரசியற்பரிமாணம் கொண்ட வழக்காகும். இவ் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தேசப்பணியாளர்களுக்கு சுவிஸ்வாழ் தமிழ் மக்களின் ஆதரவு உண்டு என்பது உறுதியாக வெளிப்படுத்தப்படுவது இவ் வழக்கின் போக்கை நம்மவர்களுக்குச் சாதகமாக்க உதவும் என இவ் வழக்கில் வாதாடும் சுவிஸ் சட்டத்தரணிகள் கருத்து வெளியிட்டார்கள். இதன் அடிப்படையிலேயே சுவிஸ் தமிழ் அவை குற்றம் சுமத்தப்பட்ட தேசப்பணியாளர்களுக்கு ஆதரவான இக் கையெழுத்தியக்கத்தை ஆரம்பித்திருந்தது. இக் கையெழுத்தியக்கத்துக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு நம்பிக்கையும், உற்சாகமும் தருவதாகவுள்ளது.
இந்நிலையில் சுவிஸ் தமிழர் அவையால் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை இணைந்து கொள்ளாத 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து சுவிஸ்வாழ் தமிழ் மக்களையும் காலதாமதமின்றி இணைந்துகொள்ளுமாறு சுவிஸ் தமிழர் அவை தோழமையுடன் வேண்டிக்கொள்கிறது.
சுவிஸ் நாட்டில் இயங்கும் அனைத்து தமிழர் அமைப்புக்களையும் இக் கையெழுத்தியக்கத்துக்கும், குற்றம் சாட்டப்பட்ட தேசப்பணியாளர்களுக்கு ஆதரவான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்கி உறுதுணையாகச் செயற்படுமாறு சுவிஸ் தமிழர் அவை பணிவுடன் வேண்டிநிற்கிறது.
இவ்வாறு சுவிஸ் தமிழர் அவை விடுத்த ஊடகஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் தமிழர் அவை – 09.06.2017

About UK TAMIL NEWS