இலங்கையில் வடமேற்கே குருணாகல் மாவட்டத்தில் பொல்பித்திகம, மொரகொல்லாகம, கரம்பே, தலாகொலவெவ ஆகிய பிரதேசங்கலில் திடீரென எங்கிருந்தோ வந்த மிகையொலி கிபிர் விமானமொன்று மிகவும் தாழ்வாக பறந்து சென்றதால் ஏற்பட்ட பாரிய சத்தம் அப்பிரதேச மக்களைக் கிலி கொள்ள வைத்துள்ளது.
குறித்த இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்ரதாகவும், இதன் காரணமாக பிரதேச மக்கள் மிகவும் பீதியடைந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
இந்த திடீர் பேரிரைச்சலைக் கேட்ட மக்கள் ஏதோ பாரிய குண்டு வெடித்துவிட்டதெனக் கருதி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி குறித்த சத்தம் ஸ்ரீலங்கா விமானப்படையின் மிகையொலி கிபிர் விமானங்களினது என்றும் அவை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிய வருகிறது.
இந்த நிலையில் இந்தச் சத்தத்தைக் கேட்ட பிரதேச மக்கள் யுத்த காலத்தில் தமிழ் மக்களின் அனுபவங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைவுகூர்ந்ததாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்தில் இந்த மிகையொலி விமானங்கள் வன்னி வான்பரப்பில் மிகத் தாழ்வாகப் பறந்து குண்டுகளை வீசியமை குறிப்பிடத்தக்கதாகும்.