விசாரணையை ஆரம்பித்தது முதல் அதை கொண்டு சென்ற படிகள் உட்பட அனைத்திலும் வடமாகாண முதலமைச்சர் தவறு செய்துள்ளார் என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாண வீதி போக்குவரத்து அமைச்சின் மன்னார் மாவட்ட உப அலுவலகத்தில் இன்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் எவ்வளவு நிதி மோசடி செய்தார்? எங்கு செய்தார்? எப்போது செய்தார் என்ற தொகை மதிப்பீட்டை உங்களினால் வெளிப்படுத்த முடியுமா?
நிதி தொடர்பான விடயங்கள் சரியான முறையில் கையாளப்பட்டிருக்க வேண்டும். அறிக்கை கிடைத்தவுடன் உண்மையாக முதலமைச்சர் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், கணக்காய்வுக்கு உட்படுத்தி ஊழல் செய்த தொகை எவ்வளவு என்பதினை கூறியிருக்க வேண்டும்.
என்னைப் பொறுத்தளவில் அமைச்சர் ஐங்கரநேசன் மீது வீண்பழி சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார். எழுந்தமானமாக ஊழல் செய்தார் என்று நீக்க முடியும் என்றால் அதனை பச்சைப்பிள்ளையால் கூட செய்ய முடியும்.
விசாரணை ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை பிழையான கோணங்களிலேயே சென்றுள்ளன. விசாரணைக்கு முகம் கொடுத்தது, விசாரணைக்குழு எடுத்த நடவடிக்கைகள், நாங்கள் கூறிய பதில்கள் எல்லாம் சரியான முறையில் நடைபெற்றுள்ள போதும் அதனை ஆரம்பித்தது முதல் கையாளும் வரை முதலமைச்சர் பிழை விட்டுள்ளார் என்பதினை என்னால் நிச்சயமாக கூற முடியும்.
இன்று கல்வி அமைச்சர் அல்லது விவசாய அமைச்சர் செய்த ஊழல் குற்றச்சாட்டு மற்றும் நிதி மோசடி என்பது எவ்வளவு? இன்றைய தினம் நான் கேட்கின்றேன். பதில் கூற முடியுமா? என அமைச்சர் கேள்வி எழுப்பினர்.
இதன் போது, தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியில் இருந்து அமைச்சரான நீங்கள் அக்கட்சியில் இருந்து தமிழரசுக்கட்சிக்கு தாவி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நீங்கள் எந்தக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்தீர்கள்? இது தொடர்பில் உங்களின் பதில் என்ன என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் வழங்கிய அமைச்சர் பா.டெனீஸ்வரன்,
நான் எந்த கட்சிக்கும் ஓடவும் இல்லை. தாவவும் இல்லை.இது ஒரு பிழையான கருத்து. நேற்றைய தினம் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் செய்தியை பார்த்தேன்.
நான் கட்சி தாவி விட்டதாகவும், ஓடி விட்டதாகவும் கூறியிருந்தார். கட்சி தாவ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தேவை என்றால் அமைச்சுப் பொறுப்பைக்கூட நாளை தூக்கி எறிந்து விட்டு செல்ல முடியும். ஆனால் இவ்வாறான துரோக வேலை செய்யும் ஆள் நான் இல்லை. அவ்வாறு அவர் கூறியதை நான் கண்டிக்கின்றேன்.
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவிற்கும் எனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் எனக்கு நட்பு ரீதியான தொடர்பு காணப்பட்டது.
ஆனால் நான் அக்கட்சியின் அங்கத்தவர் இல்லை. மேதகு ஆயர் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டேன். நான் போட்டியிட்ட கட்சி டெலோ இயக்கமாக காணப்பட்டது. நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது முதல் இன்று வரை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியிலேயே இருக்கின்றேன்.
அவர்களுடைய போராட்டத்தில் நான் நேரடியாக ஆயுதம் ஏந்தி போராடாது விட்டாலும் தேர்தலில் போட்டியிட்டவுடன் நான் அந்த கட்சியுடன் இருக்கின்றேன்.
அன்றைய தினம் தமிழரசுக்கட்சிக்கு மாறினேன் என்பது தவறு. பெரும்பாலான உறுப்பினர்கள் வெளியிட்ட அதிருப்தியின் காரணமாக மாகாணசபை அமர்வின் மதிய உணவுக்கு சென்ற போது இது தொடர்பில் கலந்துரையாடினோம்.
இதன்போது, முதலமைச்சரின் தீர்ப்பிற்கு ஒத்துப்போகாத நாங்கள் எதிர்க்கட்சி உட்பட அதிருப்தியடைந்த அனைவருமே இந்த விடயத்திற்கு எதிராக செயற்பட்டோம். இதில் கட்சி பேதங்கள் இல்லை. ஆனால் அதிகளவான உறுப்பினர்கள் தமிழரசு கட்சியை சார்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.
மூவர் அடங்கிய குழுவில் விசாரணை அறிக்கை வந்ததன் பின்னர் தலைவர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோர் மாகாண சபை உறுப்பினர் மயூரன் ஊடாக அறிக்கை ஒன்றினை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் அமைச்சு பொறுப்புக்களில் இருந்து நீக்க வேண்டும் என்று. என்மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் கூட என்னை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் ஏன் செயற்பட வேண்டும்?
ஊழல் குற்றச்சாட்டு செய்யவில்லை. இவரை ஏன் நீக்க வேண்டும், நீக்க வேண்டாம் என்று பாடு பட்டிருக்க வேண்டுமே தவிர நீக்க வேண்டும் என்று ஏன் கேட்டார்கள். அது தான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது. அமைச்சுப்பதவி வேண்டும் என்றால் என்னிடம் கேளுங்கள் நான் பிச்சையாக தூக்கி எறிந்து விட்டு போகின்றேன்.
இதில் இருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் நீதிமன்றம் செல்வேன் என்றால், நீதி நியாயமாக உழைத்து என்னையும் பார்த்துக்கொள்ள முடியும். என்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கும் உதவி செய்ய முடியும். எனவே அமைச்சுப்பதவிக்காக அங்கும் இங்கும் தாவுகின்றேன் என்ற கதையை கூற வேண்டாம்.
எத்தனையோ மில்லியன் ரூபாய்களை தந்து மத்திய அரசில் உள்ள பொரும்பான்மையான கட்சிகள் தமது கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு கூறினார்கள். எனக்காக வடமாகாணத்திற்கு எத்தனையோ வேலைத்திட்டங்களை கொண்டு வந்து செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தமது கட்சியுடன் இணையுமாறும் தெரிவித்தனர்.
ஆனால் நான் அவ்வாறு செல்லவில்லை. அற்ப சொற்ப ஆசைகளுக்காக ஆசைப்பட்டவன் நான் இல்லை. கட்சியுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கதைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அப்போது என் பக்கம் உள்ள நியாயத்தை நான் தெரிவிப்பேன். முதலமைச்சருக்கு அதிகாரங்கள் இருக்கின்றன.
நான்கு அமைச்சர்களையும் மாற்றுவதற்கு விசாரணையினை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தனக்கு நம்பிக்கை இல்லை என்றால், விசுவாசமாக நாங்கள் நடக்கவில்லை என்றால் தூக்கி எறிந்து விட்டு புதியவர்களை அமைச்சர்களாக நியமித்திருக்க முடியும்.
விசாரணை நடந்து தீர்ப்பு வந்ததன் பின்னர் தீர்ப்புக்கு மாறாக நடப்பவர் ஒரு நீதிபதியா? எனவே நான் கட்சி தாவவில்லை, இன்னும் இருக்கின்றேன். அதுவும் டெலோவில் தான் இருக்கின்றேன். தற்போது என்னிடம் பேரம் பேசப்பட்டு வருகின்றது. இந்திய அரசியல் மற்றும் தென் பகுதி அரசியல் போன்று என்னிடம் பேசப்படுகின்றது.
வடமாகாண சபையில் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 15 பேரும், முதலமைச்சர் தலைமையில் 15 பேரும் தற்போது இருக்கின்றனர். சி.வி.கே.சிவஞானம் தலைமையில் எங்களுடைய தரப்பில் எதிர்க்கட்சியையும் சேர்த்து 21 பேர் இருக்கின்றோம்.
இந்த நிலையில் இன்றைய தினம் என்னிடம் தொடர்பு கொண்ட முக்கியமான நபர்கள் சிலர் கூறிய விடயம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பக்கம் வருமாறும் தற்போதைய அமைச்சுப்பொறுப்பை அப்படியே தக்க வைத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.
ஆனாலும், அமைச்சுப் பொறுப்புக்கு ஆசைபட்டு குறித்த செயற்பாட்டில் நான் இறங்கவில்லை. நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவே இறங்கியுள்ளேன். அற்ப சொற்ப அமைச்சுப்பதவிக்காக நான் நீதியை கொன்றுவிட்டு வர முடியாது.
நடந்த பிழைகள் என்ன? என்பதினை ஏற்றுக்கொண்டு நகர வேண்டுமே தவிர, இரண்டு பகுதியிலும் மாறி மாறி பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதோ, மாறி மாறி கட்சி தாவுவதோ தீர்வு அல்ல.
எனவே நான் கட்சி மாறவும் இல்லை, அமைச்சுப்பதவிக்காக நான் அவர்களுடன் சேர்ந்து கொள்ளவும் இல்லை. அமைச்சுப் பொறுப்பை தூக்கி எறிந்து விட்டு நீதியை நிலை நாட்டுவதற்காக நான் தயாராக இருக்கின்றேன் என அமைச்சர் டெனீஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.