என் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஊழல் செய்ததாகக் கூறப்படும் தொகையின் இரண்டு மடங்கு பணத் தொகையை நான் தருவேன், என வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (25) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் அமைச்சர்கள் தொடர்பாக நடைபெற்ற பிரச்சினை பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். என்னை ஒரு மாதகால விடுப்பில் செல்லுமாறு எனக்கு பணிக்கப்பட்டது.
ஆனால் நான் அவ்வாறு செல்லவில்லை. நான் ஊழல் செய்யவில்லை. அதனால் நான் விடுப்பில் போக தயாரக இல்லை.
நீதியான முறையில் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளபடக் கூடிய விசாரணைக் குழு அமையுமாயின் அந்த விசாரணைக்கு நான் தயார். அதற்கு ஒரு மாதகாலம் அல்ல, தேவை ஏற்படின் எனது அமைச்சு பதவியில் இருந்து விலகி இந்த விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பேன்.
என்மீது ஊழல் குற்றச்சாட்டுத் தொடுத்த சாட்சி வரவில்லை என்றும் என்னை ஒன்றும் கேட்கவில்லை என்று பலர் கூறுகின்றார்கள். அந்தச் சாட்சி அந்த நாளில் ஜெனிவாவில் உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்தச் சாட்சி அந்த நாளில் யாழ்ப்பாணத்தில்தான் இருந்துள்ளார் என்பதனை நான் நன்கு அறிவேன்.
என்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றசாட்டு முறையான விசாரணைக் குழு மூலமாக நிருபிக்கப்பட்டால் அந்தத் தொகையின் இரண்டு மடங்கை நான் தருவேன். இன்னமும் நான் பயன்படுத்தும் வாகனத்துக்கு எரிபொருள் செலவு போதாமல் உள்ளது. ஒரு மாதத்துக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.
இது எனக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் செலவை விட அதிகமாகவே எனக்குச் செலவு ஏற்படுகின்றது. இது தொடர்பாக நான் முதலமைச்சரிடம் தெரிவிப்பேன்.
நான் தமிழ் அரசுக்கட்சியுடன் இணைந்து விட்டேன், கட்சி மாறிவிட்டேன் என்று கூறுகின்றார்கள். அதில் எந்த உன்மையும் இல்லை. நான் இப்போதும் ரெலோ கட்சியில் தான் உள்ளேன். 2013 ஆம் ஆண்டு நான் கட்சி மூலமாகத்தான் அமைச்சராக பதவிஏற்றேன். இன்றும் அதே கட்சியில் தான் உள்ளேன். எனது கட்சி ஜனநாய முறையை விட்டு வழி தவறி நடந்தால் நான் கட்சி மாறவேண்டிய நிலை ஏற்படும்.
அமைச்சர்கள் மீது யாரும் எந்த குற்றச்சாட்டும் வைப்பார்கள். அதனை உரிய விசாரணைக்குழு மூலமாகப் பரிசீலினை செய்த பின்னர் அவர்கள் பற்றிய தகவல்களை விசாரணைக்கு உட்படுத்துங்கள். இல்லை என்றால் மக்களுக்காக செயற்படும் மாகாண சபை என்ற பெயர் இல்லாமல் போய் வடக்கு மாகாண சபை விசாரணை சபையாக மாறும்.
அவைத் தலைவர் என்பவர் மரியாதைக்கு உரியவர். அதனால்தான் அவரின் ஆசனம் அண்மையில் புதிதாக வடிவமைக்கப்பட்டது. அது எமக்கு ராசி இல்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது. அந்தக் கதிரை வந்த பிறகு வடக்கு மாகாண சபையில் அமைதியின்மை காணப்படுகின்றது. ஆனால் கடந்த வடக்கு மாகாணசபை அமர்வு மிக அமைதியாக நடைபெற்றது மிகவும் வரவேற்கத்தக்கது´ என்றார்