முதலமைச்சருடைய செயற்பாடு வரவேற்கத்தக்கது, அந்த தீர்மானத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றோம். மறைமுகமாக செயற்பட வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை காரியாலயத்தில் உயர்மட்ட உறுப்பினர்களின் அரசியல் குழு கூட்டம் இன்று காலை 10.00 மணி தொடக்கம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“அவசரமாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு இன்று கூடுவதன் நோக்கம் வட மாகாண சபையிலே ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை சம்பந்தமாக ஆராய்வதற்காக 2 மணிக்கு நடைபெற இருக்கின்றது.
நேற்றைய தினம் முதலமைச்சர் அவர்கள் ஊழல் அமைச்சர்கள் பதவி விலகி கொள்ள வேண்டும் என்ற முடிவை மாகாண சபையிலே அறிவித்திருக்கின்றார். இந்த ஒரு நிலையிலே தமிழீழ விடுதலை இயக்கம் நல்லதொரு முடிவை சொல்ல வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.
ஆகவே அந்த ஒரு விடயத்தை எங்களுடைய அரசியல் குழு 2 மணிக்கு கூடி சரியான முடிவை எடுக்க இருக்கின்றது.
அந்த வகையிலே 2 மணிக்கு கூடுகின்ற எங்களுடைய அரசியல் குழு இந்த வடமாகாண சபையின் பிரச்சினைகளை எப்படி கையாளலாம் என்பதை நாங்கள் முடிவெடுத்து அறிவிக்க இருக்கின்றோம்.
தமிழீழ விடுதலை இயக்கம் யார் சார்பாக முடிவெடுப்பீர்கள்? மக்கள் சார்பாக இருக்குமா? திடீர் மாற்றங்கள் ஏதாவது வருமா? என்று வினவிய போது,
தமிழீழ இயக்கத்தை பொறுத்த மட்டில் யாருடைய பக்கமும் நின்று செயற்படுகின்ற வரலாறு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கும் நோக்கிலே தான் நாங்கள் சில விடயங்களை எடுத்து வந்தோம்.
அந்த வகையிலே எங்களுடைய முழு செயற்பாடும் மக்கள் சார்ந்ததாகவே தான் இருக்குமே ஒழிய என்னுமோர் கட்சி சார்ந்ததாக இருக்காது. அந்த வகையிலே எங்களுடைய நிலைமைகள் நாங்கள் திடமாக ஆராய்ந்து மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்ற முடிவுகளை மேற்கொள்வோம்.
உதாரணமாக நாங்கள் விடுதலைப்புலி உறுப்பினர்களோடு இணைந்து வேலை செய்தவர்கள் அப்படி பார்த்தால் நாங்கள் விடுதலைப் புலிகளோடு இணைந்து வேலை செய்ய முடியாத கட்டத்திலே தமிழீழ விடுதலை இயக்கம் இருந்தது.
இரண்டு தரப்பினரும் சகோதர படுகொலைகளை பாதிக்கப்பட்ட பெரிய இயக்கம் என்றால் எங்களுடைய இயக்கம் அப்படியிருந்தும் மக்களுடைய நலன், மக்களுடைய விருப்பம் என்பவற்றை கொண்டு செயற்பட்ட நாங்கள் இந்த விடயத்திலும் சரியான முடிவுகளை எடுப்போம்.
தமிழீழ விடுதலை இயக்கம் என்று சொல்லும் போது யாரிடமும் தங்கி இருக்க வேண்டிய தேவை அதற்கு இல்லை.
மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள். மக்களின் சிந்தனையின் பிரகாரம் தான் தமிழீழ விடுதலை இயக்கம் பயணிக்கும் என்பதனை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
நேற்று எதிர்க் கட்சியினராலும், தமிழரசு கட்சியினராலும் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் மறைமுகமாக ரெலோவும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது. இது குறித்து வினவிய போது..
இன்று நாங்கள் ஊடகங்களுக்கு அறிவித்திருக்கின்றோம் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து அவருடைய செயற்பாடு வரவேற்கத்தக்கது என்று. நாங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றோம். மறைமுகமாக நாங்கள் செயற்பட வேண்டிய அவசியம் இல்லை.
அப்படி நாங்கள் செயற்படுவதாக இருந்தால் அந்த பிரதியிலே எங்களுடைய பிரதிநிதிகள் கையொப்பமிட்டிருப்பார்கள். ஆகவே பின்னாலிருந்து கொண்டு அதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற குள்ளத்தனம் எங்களுக்கு இல்லை. நேரடியாகவே நாங்கள் விடயங்களை சொல்லுவோம். யாருக்கும் பயப்படப்போவதில்லை.
ஆகவே மறைமுகமாக இந்த விடயத்திலே இருக்க வேண்டிய தேவைகளை நாங்கள் முழுமையாக இறங்கினால் கையெழுத்து போட்டு அதற்கு ஆதரவு தெரிவித்திருப்போம்.
ஆனால் அந்த விடயத்திலே தமிழீழ விடுதலை இயக்கம் நிதானத்தை கடைப்பிடிக்கின்றது. 2 மணிக்கு தன்னுடைய கட்சியின் நிலைப்பாடை தெளிவாக அறிவிக்குமென செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.