மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் ப.டெனீஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறையை இரத்து செய்வதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மதத் தலைவர்கள், பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோரின் உறுதியளிப்பை தொடர்ந்தே தான் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த முதலமைச்சர் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.
இன்று காலை என்னால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதில் வழங்கியிருக்கின்றார்.
அதில் எனக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெறுவதாக உறுதியளித்திருக்கின்றார்.
இதேபோல் நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வழங்கிய உத்தரவாதம் ஆகியவற்றை தொடர்ந்து இரு அமைச்சர்களுக்கும் வழங்கிய கட்டாய விடுமுறையை விலக்கிக்கொள்கிறேன்.
அதே சமயம் இந்த விடயத்தில் அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ளவர்களே விசாரணைகளுக்கு சாட்சியம் வழங்க வேண்டும்.
ஆனால் இவர்கள் அமைச்சு பொறுப்புக்களில் இருப்பதால் விசாரணைகளை நடத்த இயலாது. எனவே அது குறித்தும் நாங்கள் கரிசனை செலுத்தவேண்டும் என்றார்.
மேலும், வடமாகாண விவசாய அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படும் என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர், ஐங்கரநேசன் மீது அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பண விரயம் போன்ற குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலமைச்சரின் விசாரணை குழுவை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக ஐங்கரநேசன் என்னுடன் பேசியிருக்கின்றார். தனது விடயத்தை மீளாய்வு செய்யும்படியும் அவர் கேட்டிருக்கின்றார்.
எனவே, அது தொடர்பாக பரிசீலிப்பதாக கூறியிருக்கின்றேன். ஐங்கரநேசன் மீது ஊழல், பணமோசடி போன்ற குற்றச்சாட்டுக்கள் இல்லை.
மாறாக பண விரயம் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுக்களே உள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.