கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரியை டெல்லியில் தாக்க முயற்சி நடந்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும் கேரளாவிலும் இது தொடர்பாக வன்முறை வெடித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களும், பாரதீயஜனதா தொண்டர்களும் மோதிக் கொண்டனர். பல இடங்களில் இரு கட்சிகளின் அலுவலகங்களும் தாக்கப்பட்டன.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் கேரள முன்னாள் முதல்-மந்திரி மறைந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சீதாராம்யெச்சூரி கலந்துகொண்டார்.
கோடானுகோடி இளைஞர்களை ஏமாற்றி நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்குவேன், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவேன் என்று மோடி வாக்குகளை வாங்கி பிரதமர் பதவியில் அமர்ந்து விட்டார். ஆனால் அவர் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
இதனால் நாடு பின்னோக்கி போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால் மோடி, மாடு பின்னால் சென்று கொண்டிருக்கிறார். நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துவிட்டது. ஆனால் அதை பற்றி மோடி அரசு கவலைப்படவில்லை. அவர் இந்திய மக்களை மறந்துவிட்டு உலகம் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.
அரசியல் வியூகம், அதிகார பலம் போன்றவற்றால் அவர் நாட்டை மதவாத ஆட்சியின் கீழ் கொண்டுவர முயற்சி செய்கிறார். இதே நிலை நீடித்தால் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே இந்தியா மிகவும் பின்தங்கிய நாடாக மாறிவிடும்.