கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்

கடந்த 30 வருட உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில், கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்ட முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்ணிவெடிகள் ஆலோசனை குழுவான மக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 இல் கண்ணிவெடிகள் அற்ற தேசம் என்ற இலக்கின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பாதுகாப்பான மாவட்டம் என்று மட்டக்களப்பு மாவட்டம் இன்றைய தினம் 21.06.2017 பிரகடனப்படுத்தப்படுகின்றத
மக் நிறுவனம் இலங்கைப் படையினரின் மனிதாபிமான கண்ணிவெடிகள் அகற்றல் பணிகளுக்கான பிரிவு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இணைப்பாக்கத்துடன் கண்ணிவெடிகள் அகற்றல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 மாத காலப்பகுதியில் 246,266 சதுர மீற்றர்கள் பரப்பளவு பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றி அழிக்கப்பட்டு துப்புரவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலப்பரப்பில் 85 சதவீதம் விவசாயப் பிரதேசங்களாகவும், 10 சத வீதம் உட்கட்டுமானப் பிரதேசங்களாகவும், 5 சதவீதம் வனப் பிரதேசங்களாகவும் உள்ளன.
இலங்கையில் மக் நிறுவனம் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் தனது நிலக்கண்ணிவெடிகள் அகற்றல் பணியை மேற்கொண்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் மக் நிறுவனம் மாத்திரமே நிலக்கண்ணிவெடிகள் அகற்றல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.
யுத்தம் முடிந்த கையோடு மட்டக்களப்பில் கண்ணிவெடிகள் அகற்றல் பணிகளில் ஈடுபடுவதற்கு மக் நிறுவனம் அனுமதிக்கப்பட்டு இருக்கவில்லை.
மக் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் அலிஸ்ரையர் மொய்ர் (Alistair Moir – Mag Country Director- Srilanka) இந்த விடயம் குறித்து தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
மக் நிறுவனம் யுத்தம் முடிவடைந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் 40 ஆயிரம் கண்ணிவெடிகளை பாதுகாப்பாக அகற்றி அவற்றை அழித்திருக்கின்றது.
இதனால், நேரடியாக 50 ஆயிரம் பொதுமக்கள் நன்மை அடைந்திருப்பதோடு வடக்கு கிழக்கில் 34 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவு பிரதேசங்கள் கண்ணிவெடிகள் அற்ற பாதுகாப்பான பிரதேசமாக மாற்றப்பட்டிருக்கின்றது.
ஆயினும், இன்னமும் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக நிறையப் பணிகளை ஆற்ற வேண்டியிருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்ணிவெடி அக்கற்றப்பட்டு பாதுகாப்பான மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் முதலாவதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் எம்.கே.சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக அமெரிக்க தூதுவர் அப்துர் ஹசாம், அவுஸ்ரேலய தூதுவர், கனடா ஆகிய நாட்டின் தூதுவர்களும் ஜப்பான் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்த சூழ்நிலையினை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை உத்தியோகபூர்வமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மட்டக்கள்பபு பாடுமீன் விடுதியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் கண்காட்சி நடைபெற்றதுடன் அதனை அதிதிகள் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கண்ணிவெடி அகற்றப்பட்ட மாவட்டம் என்னும் வகையிலான ஆவனங்களும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பில் 509.8 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தியடைந்துள்ளது.
இவற்றில் 1276546 வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மைக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

About UK TAMIL NEWS