என்மீது இருக்கும் அச்சம் காரணமாக சூனியம் வைத்தேனும் என்னை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களின் இவ்வாறான செயல்களுக்கு நான் ஒருபோதும் அச்சப்படப்போவதில்லை.
இதன் காரணமாக நாங்கள் மேலும் வலுவடைவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.மேலும் நான் பொது வேட்பாளராக களமிறங்கிய போதுதான் சுயாதீன தொலைக்காட்சி சேவை தனது சுயாதீனத்தன்மையை இழந்தது எனவும் குறிப்பிட்டார்.
சுயாதீன தொலைக்காட்சி ஊடக சேவையின் 38வது வருட ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த 5 மாடி கட்டிட தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுயாதீன் தொலைக்காட்சி சேவை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
சுயாதீன தொலைக்காட்சி சேவையானது ஊடக நிறுவனம் ஒன்றுக்கு இருக்கவேண்டிய சுயாதீனம், ஊடக தர்மம், ஒழுக்கம் போன்றவற்றை பேணி வந்து 38வருடத்தை இன்று பூர்த்தி செய்துள்ளது.
1977 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் அரச ஊடகங்களே இருந்து வந்தன. அதன் பின்னரே தனியார் ஊடகங்கள் விரிவடைந்தன. நவீன உலகில் நவீன தொழிநுட்பத்துடன் வாழும் மனிதனை நெறிப்படுத்த ஊடகங்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகும்.
ஊடகத்தில் ஆரோக்கியத்தன்மை, மனிதாபிமானம், கட்சி பேதமற்ற தன்மை என்பன மிகவும் அத்தியாவசியமானதாகும்.
அதனால் ஊடக நிறுவுனர்கள், ஊடகவியலாளர்கள் ஊடக பிரதானிகள் அனைவருக்கும் அனைத்து நாடுகளிலும் தங்கள் தேசத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு சாட்டப்படுள்ளது.
அதனடிப்படையில் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் 38 வருடகாலம் தனது பொறுப்பை மிகவும் சிறந்த முறையில் மேற்கொண்டு வந்துள்ளது. என்றாலும் இந்த நிறுவனம் மீது மக்கள் வைத்திருந்த கெளரவம்,நம்பிக்கை மற்றும் அதன் சுயாதீனம் என்பவற்றை நான் பொதுவேட்பாளராக அரசில் இருந்து வெளியில் வந்தபோதுதான் அது இழந்தது.
நாட்டில் இருக்கும் எந்தவொரு தேசிய தலைவரும் எந்தவொரு ஜனாதிபதி, பிரதமர் வேட்பாளரும் என்னைவிட இந்த நிறுவனத்தால் அசிங்கப்படவில்லை. காயப்படுத்தப்படவில்லை.
என்றாலும் சிறிய குடும்பத்தில் இருந்துவந்த நான் பாரிய சவாலாக இருந்தமையால்தான் இன்றும் பெரியவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் மிகவும் கீழ்மட்டத்துக்கு சென்று என்னை தாக்க, விமர்சிக்க முற்பட்டனர் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன்.
அத்துடன் வரலாற்றில் அரச ஊடகங்கள் மிகவும் முறையற்ற முறையில் பயன்படுத்தப்பட்டன. நான் பொது வேட்பாளராக வந்தபோதே அது நடந்தது.
குறிப்பாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் 38 வருடங்கள் அனுபவம் நிறைந்த நிலையில் கடந்த 2வருடங்களுக்கு முன்னர் மிகவும் மோசமான முறையில் பயன்படுத்தப்பட்டது நான்பொது வேட்பாளராக வந்தபோது என்பதே உண்மையாகும்.
எனக்கு எதிராக எந்த நடவடிக்கைகள் விமர்சனங்கள் மற்றும் காயப்படுத்தல்களை மேற்கொண்டாலும் பெளத்தன் என்றவகையில் நான் பொறுமையாக செயற்படுவேன். எதிராக செயற்படப்போவதில்லை.
அத்துடன் அனுராதபுரம் ஹொரவபொத்தான பிரதேசத்தில் எனக்கு சூனியம் வைத்துள்ளதாக இன்று பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அன்று நான் பொதுவேட்பாளராக இருக்கும்போது இருந்த சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமல்போனதனால்தான் சூனியம்வைத்தேனும் என்னை அச்சுறுத்த முயற்சிக்கின்றனர்.
இவர்களின் இந்த சூனியங்களுக்கு நான் ஒருபோதும் நிலைகுலையமாட்டேன். இதன்மூலம் நாங்கள் மேலும் சக்திபெறுவோம்.அத்துடன் அன்று சுயாதின தொலைக்காட்சி நிறுவனம் எனக்கு எதிராக செற்பட்டாலும் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது நான் ஒருபோதும் வைராக்கியம் வைக்கமாட்டேன்.
ஏனெனில் அவர்களை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்று எனக்கு தெரியும். மக்கள் அவர்களுக்கு தீர்ப்பளித்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.
எனவே கடந்த காலத்தைப்போன்று இந்த ஊடக நிறுவனம் செயற்படாமல் சுயாதீன ஊடக நிறுவனமாக செயற்பட பிரார்த்திக்கின்றேன் என்றார்.