நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-
“சினிமா அதிசயமான ஒரு பொழுதுபோக்கு சாதனம். இந்த சாதனத்தை வைத்து சமூகத்துக்கு ஏதேனும் ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பது சில இயக்குனர்களின் சித்தாந்தமாக இருக்கிறது. இன்னும் சில இயக்குனர்கள் கருத்து சொல்லாமல் வேறு கோணங்களில் படங்களை உருவாக்குகிறார்கள்.
எனது பார்வையில் சினிமா என்பது அழகான பொய். வேறு ஒரு உலகத்தை கண்முன் நிறுத்தும் அழகிய சாதனம். சினிமா மூலம் கருத்து சொல்வது ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது அப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை. எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நன்றாக தெரிந்து இருக்கிறது.
ஒருவர் சொல்வதை இன்னொருவர் கேட்கும் நிலைமை சுத்தமாக இல்லை. சினிமா மூலம் சமூகத்துக்கு கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. ஆனால் சினிமாவில் நல்ல கருத்துக்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. வெள்ளித்திரையில் நடக்கும் அனைத்து விஷயங்களும் ரசிகர்களுக்கு தெரிந்து இருக்கிறது. டெக்னீசியன்கள் பற்றியும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்
.
குறிப்பிட்ட காட்சிகளை பார்க்கும்போது அதன் பின்னணியில் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களையும் கண்டுபிடித்து விடுகின்றனர். ஒவ்வொரு காட்சியிலும் ‘கிராபிக்ஸ்’களை எந்த அளவு பயன்படுத்தி உள்ளனர் என்பதையும் புரிந்து வைத்து உள்ளனர். அதில் இருக்கும் தவறுகள் கூட அவர்களுக்கு ஆழமாக புரிகிறது. அதை கண்டுபிடித்து வெளியே சொல்லி விடுகின்றனர்.
அந்த அளவுக்கு ரசிகர்கள் அனைவரும் புத்திசாலிகளாக வளர்ந்து விட்டனர். சினிமாவை அவர்கள் பொழுதுபோக்குக்காக பார்க்கின்றனர். தங்களை சந்தோஷப்படுத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். கருத்துக்களை எதிர்பார்ப்பது இல்லை.”
இவ்வாறு அனுஷ்கா கூறினார்.