பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திரும்பச் செலுத்தவில்லை. இதனால், சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அவர் மீது மத்திய அமலாக்கத்துறை கிரிமினல் வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் மல்லையா தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்று விட்டார். லண்டனில் தங்கி இருந்த அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
அத்துடன் அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. அவரை நாடு கடத்தும்படி பிரிட்டன் அரசாங்கத்திடம் இந்தியா வேண்டுகோள் விடுத்து, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தது. அவற்றை பிரிட்டன் வெளியுறவுத்துறை சமீபத்தில் சரிபார்த்து ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து, லண்டனில் தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் வெளிவந்தார்
இந்நிலையில், லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா இன்று மீண்டும் ஆஜரானார். தலைமை நீதிபதி எம்மா லூசி அர்புத்னோட் மல்லையாவிற்கு டிசம்பர் 4-ம் தேதி வரை ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகின்ற ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா, தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து வெளியே வருவதற்கு தம்மிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ”தான் எந்தவொரு நீதிமன்றத்தையும் ஏமாற்றவில்லை. நான் ஊடகத்திற்கு எந்தவொரு பேட்டியும் கொடுக்க மாட்டேன். ஏனெனில் நான் என்ன சொன்னாலும் அது திரித்து கூறப்படுகிறது. இந்திய அணியை ஊக்கப்படுத்த நான் போட்டிகளை காண செல்கிறேன். இது ஊடகங்களில் செய்தியாகிறது” என்றார்.