கடந்த வருடம் பிரித்தானிய கடலில் மூழ்கி உயிரிழந்த ஐந்து இலங்கையர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
இதன்போது பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் மூழ்கி பலியான தமிழர்கள் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் என தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் சகோதரர்கள் இருவர் உட்பட ஐவர் உள்ளடங்குகின்றனர்.
கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி லண்டன் பகுதியில் வசித்த குறித்த ஐவரும், பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்ற போது நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
22 வயதுடைய நிதர்ஷன் ரவி, 23 வயதுடைய இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா, 22 வயதான கோபிநாதன், 19 வயதான கெனிகன் சத்தியநாதன், 27 வயதான குருசாந்த் சிறிதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாகும்.
உயிரிழந்த ஐவர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
உயிரிழந்த கோபிநாதன் மற்றும் அவரது சகோதரர் கெனிகன் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள். எனினும் இரண்டு சகோதரர்களும் நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணையின் போது நோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மரணத்தின் ஊடாக பல பாடங்களை கற்றுக் கொண்டுள்ளதாகவும் இது போன்ற அனர்த்தத்தை வேறு யாரும் சந்திக்க கூடாதென உயிரிழந்தவர்களின் குடும்ப வழக்கறிஞர் Patrick Roche தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் நன்கு நீச்சல் திறனை கொண்டவர்கள் எனவும், இலங்கையில் அவர்களது கிராமம் மூன்று மிக பெரிய ஆறுகளால் சூழப்பட்டதென உயிரிழந்த சகோதரர்களின் தந்தை ஆறுமுகம் சத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு 10 முதல் 14 வயதில் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் தனது பிள்ளைகள் இருவரும் கிரிக்கெட், கால்பந்து மற்றும் நீச்சல் விளையாட்டுகளில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஈடுபடுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
தாங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு கோடைகாலத்திலும் பிரித்தானியாவிலுள்ள கடற்கரைக்குச் செல்வோம் எனவும் சில சந்தர்ப்பங்களில் தாம் இல்லாமல் பிள்ளைகள் மாத்திரம் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Brighton பல்கலைக்கழகத்தில் கோபி வர்த்தக கற்கைகளை மேற்கொண்டார். அவர் கெம்பர் கடலை நேசித்தார். 2016ஆம் ஆண்டு உயிரிழப்பதற்கு முன்னர் 3 முறை அந்த கடலுக்கு அவர் சென்று வந்தார் என தந்தை கூறியுள்ளார்.
கெனிகன் என்பவர் உயர்தர மாணவராகும். அவர் மிகவும் ஆரோக்கியமானவராகும். அத்துடன் எந்தவொரு நோயினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் கோபிக்கும் பெரிய அளவிலான எந்த நோய் தன்மையும் காணப்படவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஐவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.